இயற்கை முறையில் நடந்த பிரசவத்தில் தாயும், சேயும் உயிரிழந்த சோகம்..!
பெரம்பலூர் அருகே இயற்கை முறையில் பிரசவம் பார்த்துக் கொண்டிருந்த கர்ப்பிணி சேயுடன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பூலாம்பாடி பேரூராட்சி சேர்ந்த விஜயவர்மன் என்பவரின் மனைவி அழகம்மாள்.
கடந்த ஏப்ரல் மாதம் தான் கருவுற்று இருப்பதாக அழகம்மாள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து அழகம்மாளை மாதம் தோறும் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக சுகாதாரத்துறை ஊழியர்களை பலமுறை நேரில் சந்தித்து அழைத்துள்ளனர்.
ஆனால் செவிலியர் படிப்பு முடிந்து அழகம்மாள் பரிசோதனைக்கு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சுகாதாரத் துறையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இயற்கை முறையில் பிரசவம் பார்த்துக் கொள்கிறோம் என்றும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் தாங்களே பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகவும் உறவினர்கள் காவல் நிலையத்தில் எழுதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அழகம்மாளுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சுகாதாரத்துறையினர் நேரில் சென்று பார்த்த போது குழந்தையை பாதி அளவு பிரசவித்த அழகம்மாள் ரத்தப்போக்கு மற்றும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடியுள்ளார்.
இதனால் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிசுவுடன் உயிரிழந்துள்ளார். மீண்டும் இயற்கை பிரசவம் சம்பவத்தால் தாயும் சேயும் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.






