பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது தெரியாமல் 7 ஆயிரம் ரூபாயை சேமித்து வைத்திருந்த முதியவர்..!
தேனியில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி தருமாறு மாற்றுத்திறனாளி ஒருவர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவு முதல் புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும் அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிவித்தது.
இதனையடுத்து பொது மக்களிடம் இருக்கும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை 2016 டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட தாள்களை இருப்பு வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உத்தரவிட்டதை அடுத்து மக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் நின்று தங்களின் பணத்தை மாற்றிக் கொண்டனர்.
பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதற்கு கடும் விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்றன அடுத்த ஓரிரு மாதங்களிலேயே பணமதிப்பிழப்பு தொடர்பான பிரச்சனைகள் நிறைவுற்று இயல்பு நிலை திரும்பியது இப்படியிருக்கையில் தேனியில் மாற்றுத்திறனாளி ஒருவர் தான் சேமித்து வைத்திருந்த 7 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி தருமாறு கோரி மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா காமயகவுண்டன்பட்டி சேர்ந்தவர் நாகராஜன். காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி. இவர் தனது மனைவி பஞ்சவர்ணம் மற்றும் இரு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
இவருக்கு தமிழ்நாடு ஊனமுற்றோர் நல வாரியத்தில் இருந்து மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இவ்வாறு உதவித்தொகையாக பெறப்பட்ட பணம் 7,000 பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது கூட தெரியாமல் சேமித்து வைத்து இருந்துள்ளார்.
கணவரின் சேமிப்பு பற்றி அறிந்த மனைவி தனது கணவன் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது கூட தெரியாமல் சேமித்து வைத்து இருந்ததாகவும் தற்போது தான் கணவரின் சேமிப்பு பற்றி தனக்கு தெரிய வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு நடைபெற்று நான்கு ஆண்டுகள் முடிவடைந்து விட்ட நிலையில் மாற்றுத்திறனாளி ஒருவர் ஆயிரம் ரூபாய் பணத்தை மாற்றித் தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ள செய்தி பலரின் கவனத்தை பெற்றுள்ளது.






