--- --:--:-- --

ரஜினியை தடுத்த சக்தி எது? அதிரடி முடிவின் பகீர் பின்னணி…யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

csa

ரசியல் முழுக்கு போடுவதாக நடிகர் ரஜினிகாந்த் திடீரென அறிவிப்பை வெளியிட்டு, அரசியல் களத்தை அதிர வைத்துள்ளார். அவரது இந்த முடிவின் பின்னணியில் கொரோனா தொற்று கவலையும், குடும்பத்தினரின் வற்புறுத்தலுமே காரணம் என்று கூறப்படுகிறது. ரஜினியின் அறிவிப்பால் அதிமுக – திமுக உள்ளிட்ட கட்சிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளன.

 

நடிகர் ரஜினிகாந்த், 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிதான் அரசியல் கட்சி ஆரம்பிப்பது தொடர்பான முறையான அறிவிப்பை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளதாகவும், போர் தொடங்கிவிட்டதாகவும் அறிவித்தார்.

 

அதன் பிறகு மூன்று வருடங்களாக, அவர் எந்த அரசியல் செயல்பாடுமின்றி அமைதியாகவே இருந்தார். இதற்கிடையே, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ததால், உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. எனவே, ரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் ரஜினி அளித்த பேட்டியில், நான் முதல்வராக மாட்டேன்; நல்லவர் ஒருவரை முதல்வராக்குவேன் என்றார். மக்களிடம் எழுச்சி வந்த பிறகு அரசியலுக்கு வருவதாகவும் சொன்னார்.

 

பரபரப்பை ஏற்படுத்திய கடிதம்

இதற்கிடையே கொரோனா தொற்று தீவிரமாக பரவ ஆரம்பித்ததால், அரசியல் களம் உள்பட நாட்டின் ஒட்டுமொத்த செயல்பாடுகளுமே முடங்கிப் போயின; ரஜினியின் அரசியல் திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. அதேநேரம், ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ததால், கொரோனா காலத்தில் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக, ரஜினி பெயரில் கடிதம் சமூக வலைதளங்களில் வெளியானது.

 

அந்த அறிக்கையை மறுத்த ரஜினி, ஆனால் அதில் இடம்பெற்றுள்ள மருத்துவர் குறிப்பிட்ட வரிகள் உண்மை என்றார். இதனால் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா என்ற கேள்வி, மீண்டும் அனைவரின் மனதிலும் எழுந்தது. ரஜினியின் வயது, கொரோனா சூழல், தேர்தலுக்கு குறுகிய அவகாசம் போன்றவற்றை வைத்து பார்த்தால், இனி ரஜினியின் அரசியல் வருகை அவ்வளவுதான் என்றே பலரும் முடிவு செய்தனர். ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, டிசம்பர் 3ம் தேதி அரசியல் வருகையை அதிரடியாக டிவிட்டர் மூலம் அறிவித்தார்.

 

ஐதராபாத்தில் ஏற்பட்ட நெருக்கடி

அத்துடன், டிசம்பர் 31ல் கட்சி பெயர் அறிவிக்கப்படும் என்ற ரஜினி, தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜகவிலிருந்து வந்த அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்தார். இது ஒருபுறம் இருக்க, “அண்ணாத்த” படத்தின் ஷூட்டிங்கிற்காக ரஜினி ஐதராபாத் சென்றார்.

 

அங்கு படப்பிடிப்பு தளத்தில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ரஜினிக்கும் ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டு, ஐதராபாத் அப்பல்லோவில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். கொரோனா தாக்கும் எந்தவித செயல்களிலும் ஈடுபடக் கூடாது என ரஜினிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.

 

இச்சூழலில்தான், ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 29) வெளியிட்டுள்ள முக்கியமான அறிக்கையில், அரசியலுக்கு வரும் முடிவை கைவிடுவதாக உருக்கமாக குறிப்பிட்டு, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார். அவர் தனது அறிக்கையில், மருத்துவர்களின்‌ அறிவுரையையும்‌ மீறி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில்‌ கலந்து கொள்ள ஐதராபாத்‌ சென்றேன்‌. 120 பேர்‌ கொண்ட படக்குழுவினருக்கு தினமும்‌ கொரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும்‌ தனிமைப்படுத்தி, முகக்‌ கவசம்‌ அணிவித்து, மிகவும்‌ ஜாக்கிரதையாகப் படப்பிடிப்பை நடத்தினோம்.

 


பலிகடா ஆக்க விரும்பவில்லை!

இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்தும்‌ 4 பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரிய வந்தது. எனக்கு கொரோனா நெகடிவ்‌ வந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக்‌ கொண்டும்‌ எனக்கு ரத்தக்‌ கொதிப்பில்‌ தொடர்ந்து ஏற்றத்‌ தாழ்வு இருக்கக்‌ கூடாது, அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தைக் கடுமையாகப் பாதிக்கும்‌ என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை ஆண்டவன்‌ எனக்குக் கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான்‌ பார்க்கிறேன்‌.

 

நான்‌ கட்சி‌ ஆரம்பித்து, சமூக வலைத்தளங்கள்‌ மூலமாக மட்டும்‌ பிரச்சாரம்‌ செய்தால்‌ மக்கள்‌ மத்தியில்‌ அரசியல்‌ எழுச்சியை உண்டாக்கித்‌ தேர்தலில்‌ பெரிய வெற்றியைப் பெற முடியாது. இப்போது இந்த கொரோனா உருமாறி புது வடிவம்‌ பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது. கொரோனா காலத்தில்‌ மக்களைச் சந்தித்து, பிரச்சாரத்தின்‌ போது என்‌ உடல்நிலையில்‌ பாதிப்பு ஏற்பட்டால்‌ என்னை நம்பி என்கூட வந்து என்னுடன்‌ அரசியல்‌ பயணம்‌ மேற்கொண்டவர்கள்‌ பல சிக்கல்களையும்‌ பல துன்பங்களைச் சந்திக்க நேரிடும்.

 

என்‌ உயிர்‌ போனாலும்‌ பரவாயில்லை, நான்‌ கொடுத்த வாக்கை தவற மாட்டேன்‌, நான்‌ அரசியலுக்கு வருவேன்‌ என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால், நாலு பேர்‌ நாலுவிதமா என்னைப் பற்றிப் பேசுவார்கள்‌ என்பதற்காக என்னை நம்பி என்‌ கூட வருபவர்களை நான்‌ பலிகடா ஆக்க விரும்பவில்லை.

 

எனவே, நான்‌ கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இதை அறிவிக்கும்‌ போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டுமே தெரியும்‌. இம்முடிவு, ரசிகர்களுக்கும்‌, மக்களுக்கும்‌ ஏமாற்றத்தை அளிக்கும்‌, என்னை மன்னியுங்கள்‌ என்று குறிப்பிட்டுள்ளார்.


அரசியல் கட்சிகள் நிம்மதி!

ரஜினியின் இந்த அறிவிப்பு, இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், இதுவரை ரஜினியை விமர்சித்து வந்த சீமான், திருமாவளவன் உள்ளிட்ட பலரும் அவரது முடிவை வரவேற்றுள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் ரஜினி அரசியலுக்கு வந்தாலும் தங்களுக்கு பாதிப்பில்லை; அதே நேரத்தில் அவரது உடல் நலன் முக்கியம் என்று கருத்து தெரிவித்துள்ளன. சமூக வலைதளங்களிலும் ரஜினியின் அறிவிப்பை வெளிப்படையானது, நேர்மையானது என்று பலரும் பாராட்டியுள்ளனர்.

 

தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. இனி கட்சி தொடங்கி பிரசாரம் உள்ளிட்ட தீவிர பணிகளை இரவு பகலாக மேற்கொள்ள ரஜினியின் உடல் நிலை ஒத்துழைப்பு தரவில்லை. போதாக்குறைக்கு கொரோனா தொற்று புதுவடிவத்தில் பரவத் தொடங்கியுள்ளது, ரஜினியின் குடும்பத்தினரை ரொம்பவே யோசிக்கச் செய்துள்ளதாம். மருத்துவர்களின் அறிவுரை, குடும்பத்தினரின் கவலை, ரசிகர்களுக்கு ஏற்படும் செலவினம் போன்றவை குறித்து தீவிரமாக யோசித்த ரஜினி, அதன் பிறகே வறட்டு கவுரம் பார்க்காமல் அரசியலுக்கு முழுக்கு போடும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

ரஜினியின் வருகையால் தங்களுக்கு சேர வேண்டிய வாக்குகள் பிரிந்துவிடுமோ என்ற கவலையில் இருந்த அதிமுக- திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளன. குறிப்பாக, அதிமுக தரப்பில் உற்சாகம் பொங்க இருக்கிறார்கள். காரணம், ரஜினியை காரணம் காட்டி, இனி பாஜக மிரட்ட முடியாது என்பதுதான். திமுக தரப்பிலும் ஏக குஷியில் இருக்கிறார்கள். இனி தேர்தல் களத்தில் அதிமுகவை மட்டுமே திமுகவிற்கு எதிரி.

 

மொத்தத்தில், ரஜினியின் அரசியல் வாழ்வுக்கு இன்று முடிவுரை எழுதப்பட்டுவிட்டது. அவரது அறிவிப்பால், 2021 சட்டமன்றத் தேர்தல் களத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையிலான நேரடிப்போட்டி என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுகவை பலவீனப்படுத்தி 3வது அணி அமைக்கலாம் என்ற பாஜகவின் திட்டமிட்டதாக கூறப்படும் சூழலில், அதுவும் பகல் கனவாகிவிட்டது என்பதே உண்மை.


Leave a Reply

Right Menu Icon