நடிகை சித்ராவை ‘ செத்துப் போ ‘ எனக்கூறிய ஹேம்நாத்தின் ஆடியோ..!
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைதான ஹேம்நாத்திடம் ஆர்டிஓ விசாரணை நடைபெறும் நிலையில் சித்ராவின் தொலைபேசி உரையாடல் காவல்துறைக்கு கிடைத்துள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறை விசாரணை, ஆர்டிஓ விசாரணை, கணவர் கைது என நாடக தொடரை விட விறுவிறுப்பாக சென்றது அடுத்தடுத்த நடவடிக்கை.
பிறந்தநாள் விழாவில் சந்தித்த சித்ரா ஹேம்நாத்க்கு இடையே காதல் மலர நிச்சயதார்த்தம் செய்து கொண்ட அந்த ஜோடி ரகசியமாக பதிவு திருமணத்தையும் செய்து கொண்டது. வரும் 2021 தொடக்கத்தில் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நடக்கவிருந்த நிலையில் தான் இறுதி முடிவை தேடிக் கொண்டாள் சித்ரா.
தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது கணவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைக்க பல்வேறு தகவல்கள் வந்தன. சக நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்க கூடாது என தொடர்ந்து சித்ராவுக்கு நிபந்தனை விதித்துள்ளார். அவ்வப்போது சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி வந்தார்.
செத்துப்போ என இறுதியாக சித்ராவிடம் கூறுகிறார். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தகவல்களை மெய்ப்பிக்கும் வகையில் சித்ராவின் ஆடியோ காவல்துறை வசம் சிக்கியுள்ளது.
அவரது செல்போனில் இருந்து ஆடியோ பதிவுகள் அளிக்கப்பட்டதால் சைபர் கிரைம் உதவியுடன் அழிந்து போன ஆடியோ பதிவுகளை காவல்துறையினர் மீட்டு எடுத்து ஆய்வு செய்தனர்.
அப்போது ஹேம்நாத் தன்னை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்துவதாக மாமனார் ரவிச்சந்திரனிடம் சித்ரா தொலைபேசியில் பேசியது அம்பலமாகியுள்ளது. இந்த ஆடியோ ஆதாரத்தை உறுதிப்படுத்திய பின்னரே ஹேம்நாத்தை கைது செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







