தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளை குழுக்களாக பிரித்து நிறுவனமாக்கி அரசு மானியத்துடன் விவசாய பொருட்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக்கி சந்தைப்படுத்துதல் குறித்த 2 நாள் கருத்தரங்கு மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் துவங்கியது !!!!
தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் உழவர்கள் நவீன வேளாண் வணிகத்தில் ஈடுபட்டு அதிக லாபம் அடைய வேண்டும் என்ற உயரிய இலக்கோடும்,விவசாயிகளை சந்தை சார்ந்த வேளாண்மைக்கு ஊக்கப்படுத்தவும்,அவர்களை வலுப்படுத்தி குழுக்களாக ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை தமிழக அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் உருவாக்கி வருகிறது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது விவசாயிகளை குழுக்களாக ஒருங்கிணைத்து விவசாய விளை பொருட்களை மதிப்பு கூட்டுதல்,அறுவடைபின் செய் நேர்த்தி,விளைபொருட்களை சந்தைப்படுத்துதல்,விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வழிவகை செய்தல் என்பதே ஆகும்.
இது குறித்த 2 நாள் கருத்தரங்கு மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று துவங்கியது.இக்கருத்தரங்கினை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். வனக்கல்லூரி முதல்வர் பார்த்திபன் சிறப்புரையாற்றினார்.

இதில் தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் மேல்பவானி உபவடிப்பகுதியில் ஓடந்துறை, நெல்லித்துறை, சிறுமுகை,கெண்டேபாளையம்,வெள்ளியங்காடு,தோலம்பாளையம், மருதூர், கண்டியூர் குத்தாரிபாளையம் மற்றும் காரமடை உள்ளிட்ட கிராமங்களிலுள்ள 1000 விவசாயிகளை ஒருங்கிணைத்து TNIAMP 2019-20 ல் ஸ்ரீ அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது.இந்நிறுவனத்திற்கு அரசு ரூ.10 லட்சம் கடனாக வழங்கப்பட உள்ளது.அதனை வைத்து விவசாயிகள் தங்களது விளைபொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தவும்,உரிய விலை கிடைக்கவும் அரசு வழிவகை செய்துள்ளது.
இக்கருத்தரங்கானது இன்றும்,நாளையும் நடைபெற உள்ளது.இதில் வேளாண்மை,தோட்டக்கலைத்துறை,நீர்வள ஆதாரத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு கருத்துகள் மற்றும் விளக்கங்களை அளிக்க உள்ளனர்.
இக்கருத்தரங்கில் சென்னை வேளாண்மைத்துறையின் இணை இயக்குநர் சேகர்,கோவை வேளாண்மை இணை இயக்குநர் சித்ரா தேவி,தோட்டக்கலை துணை இயக்குநர் புவனேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள்,உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்,கல்வி நிறுவனங்கள்,தொழிற்துறை நிறுவனங்கள்,நிதி நிறுவனங்கள்,ஆதார நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






