சிறுவனிடம் இருந்து வெள்ளிக் கொடியை திருடிக் கொண்டு சென்ற முதியவர்..!
மது அருந்துவதற்காக 11 வயது சிறுவன் அணிந்திருந்த வெள்ளி கொடியை திருட முயற்சி செய்ததில் சிறுவனை கொலை செய்ய முயன்ற முதியவர் கைது செய்யப்பட்டிருப்பது வாணியம்பாடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அருகே திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி கணபதி, சித்ரா தம்பதியினரின் மகன் சதீஷ். தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சதீஷை அவனுடைய தாத்தா அழைப்பதாக கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார்.
ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற முதியவர் பாலன் சிறுவன் அணிந்திருந்த வெள்ளி கொடியை திருடுவதற்கு முயன்றுள்ளார். அப்போது தப்பிக்க முயன்ற சிறுவனை அங்கு உள்ள முட்புதரில் தள்ளி நீரில் மூழ்கடித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
மயங்கிய நிலையில் இருந்த சிறுவன் இறந்துவிட்டதாக நினைத்து வெள்ளி கொடியை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மழை பெய்ததால் மழை நீரில் நனைந்து சிறுவனுக்கு மயக்கம் தெளிந்து விழித்து எழுந்தார். அங்கிருந்து தப்பி வந்த சிறுவன் நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக சிறுவனை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிறுவனின் பெற்றோர் வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிறுவனை கொலை செய்ய முயன்ற கொடூர முதியவரின் செயல் வாணியம்பாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






