ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பச்சிளம் குழந்தை..!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ஒரு லட்சம் ரூபாய்க்கு பச்சிளம் குழந்தை விற்கப்பட்ட சம்பவத்தில் இடைத்தரகர் கண்ணனை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் வடுகப்பட்டி அருகே உள்ள பூங்கா நகர் பகுதியில் வசிக்கும் ஹாஜி முகமது, அமீனா பேகம் தம்பதிக்கு கடந்த 2ஆம் தேதி மணப்பாறை அரசு மருத்துவமனையில் நான்காவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த 11ஆம் தேதி அமீனாவை அணுகிய கண்ணன் என்ற சலவை தொழிலாளி நான்காவதாக பிறந்த குழந்தையை விற்று விடலாம் என்று பேசி சம்மதிக்க வைத்து காரில் தாயையும் குழந்தையையும் ஈரோட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
ஈரோடு பேருந்து நிலையத்தில் வைத்து பெண் குழந்தையை வேறு ஒரு நபருக்கு விற்றுவிட்டு ஒரு லட்சம் ரூபாயை குழந்தையின் தாயிடம் கண்ணன் வாங்கிக் கொடுத்ததாகவும், பின்னர் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு மீண்டும் பூங்கா நகரில் விட்டுவிட்டு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் புதுக்கோட்டை சைல்டு லைன் அமைப்பினர் அமினா பேகத்தை விராலிமலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது வறுமையின் காரணமாக குழந்தையை பெற்றதை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
பின்னர் குழந்தையின் தாய் மற்றும் தந்தையுடன் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நல குழும அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டபோது குழந்தையை தாங்கள் விற்கவில்லை என்றும் இடைத்தரகர் கண்ணன் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஏமாற்றி விட்டு குழந்தையை கடத்தி சென்றுவிட்டதாகவும் அமீனா பேகம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அமீனா அளித்த புகாரின் பேரில் இடைத்தரகர் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்த விராலிமலை காவல்துறையினர், ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். ஈரோட்டில் விற்கப்பட்ட பச்சிளம் குழந்தையை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் உதவியோடு அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.






