தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து இறங்குமுகம்… இன்று 4295 பேருக்கு தொற்று உறுதி …57 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து இறங்குமுகமாகவே உள்ளது. நேற்று 4389 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் இன்று 4295 ஆக குறைந்துள்ளது. நேற்று போலவே இன்றும் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் கடந்த சில நாட்களாகவே குறையத் தொடங்கியுள்ளது. 81 நாட்களாக 5 ஆயிரத்திற்கு மேலாக தினசரி பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், கடந்த 5 நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது.
இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4295 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 83 ஆயிரத்து 486 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 5005 ஆகும். இன்னும் சிகிச்சையில் உள்ளவர்கள் 40 ஆயிரத்து 192 பேர் ஆவர். தமிழகத்தில்இன்றும் நேற்று போலவே கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக 57 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 10 ஆயிரத்து 586 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று 1140 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 1132 ஆக சற்றே குறைந்துள்ளது. அடுத்த இடத்தில் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து அதிக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது. கோவையில் இன்று 389 பேருக்கும், செங்கல்பட்டில் 231 , சேலம் 240, திருவள்ளூர் 218, திருப்பூர் 159 என இந்த மாவட்டங்களில் அதிக பாதிப்பு இன்று பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.






