--- --:--:-- --

“ஓபிஎஸ் வீட்டுக்கு சென்ற இபிஎஸ்!” முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு நேரில் நன்றி தெரிவித்தார்!!

DXG

முதல்வர் வேட்பாளராக தம்மை அறிவிக்க வழிவிட்டு ஒதுங்கியதற்காக, துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ்சை அவருடைய வீடு தேடிச் சென்று எடப்பாடி யார் நன்றி தெரிவித்தார்.

 

அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் கடந்த இரு மாதங்களாக பெரும் சர்ச்சையானது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியில் கெட்டியாக அமர்ந்துள்ள இபிஎஸ் தான் மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்பதில் தற்போதைய அமைச்சர்களில் பலரின் விருப்பமாக இருந்தது. ஆனால் கட்சி யின் ஒருங்கிணைப்பாளராகவும் துணை முதல்வராகவும் உள்ள ஓ.பன்னீர்செல்வம், தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என திடீர் போர்க் கொடி தூக்கினார்.

 

இதற்கு ஆதரவாக அவருடைய ஆதரவாளர்களும் ஆதரவுக் குரல் கொடுத்து அவரை உசுப்பேற்றினர். இதனால் கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்ய கடந்த மாதம் 28-ந் தேதி கூட்டப்பட்ட செயற்குழுவிலும் இருவர் இடையே நேருக்கு நேர் வாக்குவாதம் ஏற்பட்டது. கடைசியில் அக்டோபர் 7-ந் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என நாள் குறிக்கப்பட்டது.

 

ஆனால் அக்.7-ந் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகுமா? என்பதும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது. காரணம் ஓபிஎஸ் தரப்பு பிடித்த முரண்டு தான். கட்சியிலும் ஆட்சியிலும் தமக்கான முக்கியத்துவத்தை தக்க வைத்துக் கொள்ள இந்த பிரச்னையில் ஓபிஎஸ் ரொம்பவே போக்கு காட்டினார்.

 

இதனால் அதிமுகவில் மீண்டும் பிளவு வருமோ? என இரு தரப்பை சாராத அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் அச்சமடைந்தனர். மூத்த அமைச்சர்கள் பலரும் இரு தரப்புக்கும் இடையே சமாதான முயற்சிகளில் இறங்கி ஓபிஎஸ் வீட்டுக்கும் இபிஎஸ் வீட்டுக்கும் நடையாய் நடந்தனர். இப்படியே இன்று அதிகாலை 3 மணி வரைக்கும் நீடித்த பிரச்னை ஒரு வழியாக சுமுகமானது.

 

முடிவில், ஓபிஎஸ் கேட்டபடி கட்சியில் அவருக்கு முக்கியத்துவமும், 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவும் அமைக்க ஒப்புக் கொள்ளப்பட்டதால், இபிஎஸ்சை முதல்வராக அறிவிப்பதற்கு அவர் பச்சைக் கொடி காட்டியதைத் தொடர்ந்து, எல்லாம் ஜெயமாகி திட்டமிட்டபடி இன்று காலை முதல்வர் வேட்பாளராக எடப்பாடி அறிவிக்கப்பட்டார். இதனால் சர்ச்சை முடிவுக்கு வந்த சந்தோஷத்தில் அதிமுக தொண்பர்கள் ஏக உற்சாகத்தில் உள்ளனர்.

 

அதிமுக வரலாற்றில் தேர்தலுக்கு முன்னர் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை இதற்கு முன் வந்ததில்லை. ஏனெனில் கட்சியை ஆரம்பித்த எம்ஜிஆருக்கு யாரும் போட்டியாக இருந்ததில்லை. அவருடைய மறைவுக்குப் பின் அவருடைய மனைவி ஜானகி அம்மையார் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டது உண்மை.

 

வீடு தேடிச் சென்ற இபிஎஸ்

 

அதே போல் முதல்வர் நாற்காலியில் தற்காலிகமாக அமர்ந்த போதும், பலத்தை நிரூபிக்க முடியாமல் ஆட்சி டிஸ்மிஸ் ஆனது. 1989 தேர்தலில் ஜா, ஜெ என அதிமுக இரு அணிகளாக பிரிந்து போட்டியிட்டு ஆட்சியை யாராலும் கைப்பற்ற முடியவில்லை. கடைசியில் ஜானகி அம்மையார் அதிமுகவை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்து விட்டு அரசியலே வேண்டாம் என ஒதுங்கினார். அது முதல் அதிமுகவில் முதல்வர் வேட்பாளருக்கு ஜெயலலிதாவுக்கு போட்டி யாரும் இல்லை.

 

இப்போது எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாத அதிமுகவில் முதன் முறையாக முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வி எழுந்து, சர்ச்சையாக வெடித்து ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து தம்மை முதல்வர் வேட்பாளராக அறிவித்து வழிவிட்டு ஒதுங்கிய ஓபிஎஸ்சுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இன்று மாலை அவருடைய வீடு தேடிச் சென்ற இபிஎஸ், நேரில் நன்றி தெரிவித்து வாழ்த்தும் பெற்றார்.

Leave a Reply

Right Menu Icon