உலக மக்கள் தொகையில் 10% பேருக்கு கொரோனா பாதிப்பு? உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்!!
உலக மொத்த மக்கள் தொகையில்10 சதவீதம் பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் விரிவடைந்தாலும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளால் குறைந்த உயிரிழப்பே நேரிடும் என்ற ஆறுதல் தகவலையும் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு, 10 மாதங்களாக உலக நாடுகளை அல்லோகலப்படுத்தி வருகிறது. முதலில் சீனாவில் கொத்து கொத்தாக உயிரிழப்பு நிகழ்ந்து விரைவில் மீண்டு விட்டது. ஆனால் ஐரோப்பாவில் பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி போன்ற பணக்கார வல்லரசு நாடுகளை கதிகலங்க வைத்து ஓரளவுக்கு அந்த நாடுகளும் மீளத் தொடங்கி விட்டன.
ஆனால் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் தான் கொரோனாவின் ஆட்டம் பேயாட்டமாக உள்ளது. கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக இந்த நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, பிரேசிலில் பாதிப்பும், உயிரிழப்பும் கிடு கிடுவென உயர்ந்து மிக உச்சத்தில் உள்ளது. தற்போது உலக மொத்த பாதிப்பு 3.56 கோடியை தாண்டி உயிரிழப்பும் 10 லட்சத்தை கடந்துள்ளது.
இதில் அமெரிக்கா ( பாதிப்பு : 76,79,644, உயிரிழப்பு : 2,15, 032) முதலிட்த்திலும், இந்தியா( பாதிப்பு : 66, 82,073, உயிரிழப்பு : 1,03,600) 2-வது இடத்திலும், பிரேசில் ( பாதிப்பு : 4940,499, உயிரிழப்பு : 1,46,773) 3-வது இடத்திலும் உள்ளன. உலக மொத்த பாதிப்பில் இந்த நாடுகளில் மட்டும் 50% சதவீதத்திற்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாடுகளில் கொரோனா தாக்கம் இன்னும் வேகமாகவே உள்ளது.
இதற்கிடையே கொரோனா தொற்று பரவத் தொடங்கியது முதலே தொடர்ந்து எச்சரிக்கைகளையும், ஆலோசனைகளையும், வழிகாட்டு நெறிமுறை களையும் வழங்கி வரும் உலக சுகாதார நிறுவனம் தற்போது முக்கிய புள்ளி விபரம் ஒன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது.
அதாவது, உலகின் 700 கோடி மக்களில் 10% பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என்பது தான் அந்த அதிர்ச்சி தகவல். தற்போதைய நிலவரப்படி 3.5 பேருக்கு பாதிப்பு என நாடுகள் கணக்கு கூறியிருந்தாலும் உண்மையில் அதை விட 20 மடங்கு அதிகமாக 70 கோடி பேருக்கு தொற்று பாதிப்பு என்பது தான் உலக சுகாதார அமைப்பின் கணக்காக உள்ளது.
இது தொடா்பாக உலக சுகாதார அமைப்பின் சிறப்பு செயற்குழுக் கூட்டத்தில் அதன் தலைவர் ரையான் கூறியதாவது:- கொரோனா தொற்று பரவல் தொடா்ந்து விரிவடையும். எனினும் அந்தத் தொற்றின் பரவலை கட்டுப்படுத்தவும், உயிா்களை காக்கவும் வழிகள் உள்ளன. இதுவரை பலா் உயிரிழப்பது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல உயிா்களை காப்பாற்ற முடியும்.
தற்போதைய மதிப்பீட்டின்படி, உலக மக்கள்தொகையில் சுமாா் 10% பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம். தொற்று தொடா்ந்து பரவி வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் பரவல் அதிகரித்து வருகிறது. தெற்காசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலகம் கடினமான காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளது அதிர்ச்சி தகவலாக உள்ளது.







