கொரோனா பாதிப்பில் மீண்ட அமெ.அதிபர் டிரம்ப்.. மீண்டும் வெள்ளை மாளிகை திரும்பினார்!!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் குணமான நிலையில் ராணுவ மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 3-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபர் டிரம்ப்புக்கும், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது, இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அதிபர் டொனால்டு டிரம்புக்கும், அவரது மனைவி மெலனியாவுக்கும் கடந்த 2-ந் தேதி கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வந்ததையடுத்து, கடந்த 3-ந் தேதி சிகிச்சைக்காக அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய ராணுவ மருத்துமனையில் அதிபர் டொனால்டு டிரம்ப் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அதிபர் டிரம்ப்புக்கு கொரோனா தொற்று பாதிப்பு என்ற தகவல் அமெரிக்காவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் பரபரப்பு செய்தியானது. மேலும் அதிபர் தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் தேர்தல் தள்ளிப்போகுமா? டிரம்ப்புக்கு பதில் வேறு ஒருவர் வேட்பாளராக நியமிக்கப்படுவாரா? என்றெல்லாம் கூட விவாதங்கள் சூடாகின. அமெரிக்க பங்குச் சந்தையில் கூட இறக்கம் காணப்பட்டது. இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் டிரம்ப் உடல் நலம் பெற வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தான் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆவதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார். வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தான் 20 ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்ததை விட இப்போது நன்றாக உணர்வதாகவும், கொரோனாவைக் கண்டு பயம் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவர் இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார், ஒரு சில நாட்கள் தனிமை ஓய்வுக்கு பின்னர் டிரம்ப் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரம் காட்டுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.





