காணாமல் போன குழந்தையை மீட்ட காவல்துறையினர்..!
கர்நாடகாவில் கடத்தப்பட்ட இரண்டரை வயது பெண் குழந்தை 25 நாட்களுக்குப் பின் தமிழக – கேரள எல்லையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. கடத்தல் குழந்தை என்பதை 6 வயது சிறுவன் காட்டிக் கொடுத்து இருப்பது இந்த சம்பவத்தின் ஹைலைட்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜோசப், எஸ்தர் தம்பதி 6 வயது சிறுவன் மற்றும் பெண் குழந்தையுடன் கேரள – எல்லையை கடந்து தமிழகத்துக்குள் நுழைய முயன்று உள்ளனர். களியக்காவிளை சோதனைச்சாவடி அருகே பெண் குழந்தை அழுவதைக் கண்ட பாதுகாப்பு பணி காவலர்கள் அவர்களிடம் விசாரணை நடத்தினார்.
அவர்களுடன் வந்த ஆறு வயது சிறுவனிடம் பேச்சுக் கொடுத்தபோது ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து குழந்தையை அழைத்து வந்ததாக சிறுவன் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அந்த தம்பதியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் குழந்தைகள் பெயரில் போலி ஆதார் அட்டை வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மீட்கப்பட்ட பெண் குழந்தை பெங்களூருவில் காணாமல் போன லோகிதா என்பதும் லோகிதாவின் புகைப்படத்துடன் அவரது தாயார் இருக்கும் வீடியோவையும் காவல்துறையினர் வெளியிட்டு இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக கர்நாடக காவல்துறைக்கு கன்னியாகுமரி காவல்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர். இதனிடையே ஜோசப் எஸ்தர் தம்பதியுடன் வந்து ஆறு வயது சிறுவன் கடத்தப்பட்ட குழந்தையா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






