--- --:--:-- --

விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பா..? கடும் மூச்சுத் திணறலால் நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி…! அதிர்ச்சியில் தேமுதிகவினர்!!

hr

தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடும் மூச்சுத் திணறல் காரணமாக நள்ளிரவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே உடல் நிலை பாதிப்பால் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என்ற தகவலால் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் பெரும் கலக்கத்திற்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகியுள்ளனர்.

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட பின் சென்னை திரும்பிய அவர், முழு வீச்சில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஓய்வில் இருந்து வந்தார். கடந்த மக்களவை தேர்தலின் போது கூட விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை.

அவருக்கு பேசுவதில் கடும் சிரமம் இருந்த நிலையில், உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு ஓரிரு கட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்த விஜயகாந்த், கடந்த ஆகஸ்ட் 14-ந் தேதி தேமுதிகவின் 14-வது ஆண்டு விழாவை தனது இல்லத்தில் கொண்டாடினார். அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பிரச்சாரத்தில் முழு வீச்சில் விஜயகாந்த் ஈடுபடுவார் என்றும் கூறப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் தான் நேற்றிரவு விஜயகாந்துக்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு நள்ளிரவில் நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சையில் உள்ள விஜயகாந்த் உடல் நிலை சீராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

இதற்கிடையே விஜயகாந்த்துக்கு கொரோனா பாதிப்பு என்ற தகவல் வெளியாகி, தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். ஆனால் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனவும், பரிசோதனை முடிவுகள் இன்று காலை 11 மணிக்குத் தான் தெரிய வரும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நிலை பாதிப்பால் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்து வந்தார். சமீப காலமாக உடல் நலம் தேறி வந்த அவர், இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பில் தேமுதிகவினர் உற்சாகமாக இருந்து வந்தனர்.

 

இந்நிலையில், விஜயகாந்துக்கு மீண்டும் உடல் நிலை சரியில்லாமல் போனதும், கொரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என்ற தகவலால் தேமுதிக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலக்கத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்துள்ளனர் என்றே கூறலாம்.

Leave a Reply

Right Menu Icon