டெல்லி விசிட்டுக்குப் பின் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு… முன்கூட்டி விடுதலையில் உள்ள சிக்கல் குறித்து ஆலோசனை!!
டெல்லிக்கு திடீர் விசிட் அடித்து ரகசிய ஆலோசனை நடத்திய டிடிவி தினகரன், பெங்களூரு சிறையில் சசிகலாவை இன்று சந்திக்கிறார். முன்கூட்டி விடுதலை ஆவதில் உள்ள சிக்கல்களை களைவது குறித்து இந்த சந்திப்பில் சசிகலாவுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஊழல் வழக்கில் 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் விடுதலை எப்போது என்பது தான் தமிழக அரசியலில் பரபரப்பான பேச்சாக உள்ளது.குறிப்பாக, சசிகலா விடுதலையால் அதிமுகவில் என்ன நிகழுமோ என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இதனால் அதிமுக தலைவர்கள் உள்ளுக்குள் பெரும் கலக்கத்தில் இருப்பதாகவே தெரிகிறது.
சசிகலாவின் 4 ஆண்டு தண்டனைக் காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடையும் நிலையில், 2021 ஜனவரி 27 -ல் அவர் விடுதலையாவார் என சிறைத்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கு முன் முன்கூட்டி விடுதலையாவதற்கான சாத்தியக்கூறுகளை டி.டி.வி.தினகரன் மேற்கொண்டு வருகிறார்.
பாஜகவின் கண் அசைவில் சசிகலாவின் விடுதலை …..?
கடந்த 20-ந் தேதி தனி விமானத்தில் டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்ட தினகரன் அங்கு சிலரை ரகசியமாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது . இதில் பாஜக முக்கியப் புள்ளிகளையும் சந்தித்ததாகவும் தகவல் .மேலும் அபராதத் தொகை ரூ.10 கோடியை செலுத்துவது குறித்தும் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி விட்டு ஒரே நாளில் தினகரன் சென்னை திரும்பினார்.
இந்நிலையில், இன்று பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்கிறார் டிடிவி தினகரன். இந்த சந்திப்பின் போது, முன்கூட்டி விடுதலையாவதில் உள்ள சிக்கல்களை களைய மேற்கொள்ள வேண்டிய வழிகள் குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, சிறையில் தமது நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டி விடுதலை செய்யுமாறு கர்நாடக சிறைத்துறை அதிகாரிகளுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சசிகலா முன்கூட்டி விடுதலையாவதை ரசிக்காத அதிமுக தரப்பு, சசிகலாவுக்கு எதிராக, பாஜக மேலிடம் மூலம் அணுகி முட்டுக்கட்டைகளை போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் சசிகலாவின் முன்கூட்டி விடுதலை என்பது பாஜகவின் கண் அசைவில் தான் உள்ளது என்றே தெரிகிறது.
இதில் டிடிவி தினகரனும், அதிமுக தரப்பும் பாஜக புள்ளிகளை சந்திப்பது தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாஜக தனது வழக்கமான பாணியில் இரு தரப்பினர் இடையே கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினாலும், இதற்கான விடை அடுத்த சில நாட்களில் தெரியத்தான் போகிறது.







