அமெரிக்காவில் வரும் நவம்பர் முதல் தேதியில் இருந்து கொரொனா தடுப்பூசி விநியோகம்..!
அமெரிக்காவில் வரும் நவம்பர் முதல் தேதியில் இருந்து கொரொனா தடுப்பூசி விநியோக நடைமுறைகளை தொடங்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக திகழும் அமெரிக்கா அதற்கான தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தீவிரமாக உள்ளது.
நவம்பர் தொடக்கத்தில் தடுப்பூசிகளைப் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அமெரிக்க மாகாண நிர்வாகம் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்கள், பாதுகாப்பு படை வீரர்கள், அதிகம் பாதிக்கப்படக் கூடிய பிரிவினருக்கு முன்னுரிமை தந்து தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி ஒவ்வொருவருக்கும் சில வார இடைவெளியில் இருமுறை போடப்படும் என்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி போடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆதாயத்தை கருதி கொரோனா தடுப்பு ஊசியை முழு சோதனைகள் முடியும் முன்பே மக்களுக்கு போட டிரம்ப் நிர்பந்திப்பதாகவும் அமெரிக்காவில் சர்ச்சை எழுந்துள்ளது. முன்னதாக தடுப்பூசி சோதனைகள் முழுமையாக முடியும் முன்னரே அவசர தேவை கருதி அதை பயன்படுத்துவதற்கான அனுமதி தரப்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்திருந்தது.
அமெரிக்க அதிபரின் நெருக்கடிக்கு பணிந்து இந்த முடிவை மருந்து கட்டுப்பாட்டுத்துறை எடுத்திருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன. முன்னதாக கொரொனா தடுப்பூசி பரிசோதனைகளை முழுமையாக நிறைவு செய்யாமல் அவசரகதியில் சந்தைக்கு கொண்டு வருவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என சர்வதேச சுகாதார நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகள் எச்சரித்திருந்தன.
இது போன்ற பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் அமெரிக்காவில் கொரொனா தடுப்பூசி போடும் பணி இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்க உள்ளது.







