--- --:--:-- --

திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு உறுதி..?

kluhol

திமுக பொதுச் செயலாளராக துரைமுகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

 

திமுகவில் 43 ஆண்டு காலம் பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் காலமானதைத் தொடர்ந்து அப்பதவி காலியாக உள்ளது. கடந்த மார்ச் 29-ந் தேதி பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, அப்பதவிக்கு துரைமுருகன் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. இதனால் தாம் வகித்து வந்த திமுக பொருளாளர் பதவியை துரைமுருகன் முன்கூட்டியே ராஜினாமா செய்த நிலையில் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கும் மார்ச் 29 ந் தேதி பொதுக்குழுவில் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது.

 

ஆனால், கொரோனா பரவல் காரணமாக பொதுக்குழு தள்ளி வைக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாக மீண்டும் பொதுக்குழு எப்போது என்பது இழுபறியாகவே இருந்தது. இடையில் பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனை தேர்வு செய்ய திமுகவில் ஒரு தரப்பு விரும்பவில்லை. அதனாலேயே தேர்தல் தள்ளிப் போகிறது என்ற செய்திகள் வெளியாகி கசமுசா ஆனது.

 

இதனால் துரைமுருகனும் அப்செட்டில் உள்ளதாகவும், கட்சி மேலிடம் மீது அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக துரைமுருகன் , தாம் பதவிக்கு ஆசைப்படுவனல்ல; தொண்டனாகவே இருப்பதில் சந்தோசம் என்றெல்லாம் அறிக்கை விட்டாலும், திமுகவில் புகைச்சல் இருப்பது மட்டும் உண்மை என்பது கசிந்தது.

 

இந்நிலையில் தான் திமுகவில் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கு வரும் 9-ந் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானது. வேட்பு மனுத் தாக்கல் நாளை காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை நடைபெறும் எனவும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 4ம் தேதி நடைபெறும் எனவும், வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் 5-ம் தேதி மாலை வரை எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும் வேட்பு மனு படிவங்களை இன்று காலை முதல் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

 

பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் அவருக்கு போட்டியாக யாரும் நிற்கப் போவதில்லை எனவும் கிட்டத்தட்ட உறுதியானது. ஏனெனில் கட்சியில் அவரை விட சீனியர் யாரும் இல்லாத நிலையில், போட்டிக்கு வேறு யாரும் நின்றால் கட்சியில் சலசலப்பு ஏற்படுவது உறுதி என்ற நிலையில் போட்டியின்றி தேர்வு செய்ய ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 

ஆனால் திமுக பொருளாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவும் என்பது போல பரபரப்பு கிளம்பியது. இப்பதவிக்கு டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டதே இதற்கு காரணம். ஆனால் பொருளாளர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என ஆ.ராசாவும், கனிமொழியும் திட்டவட்டமாக கூறி விட்டதால் டி.ஆர்.பாலு மட்டுமே போட்டியில் இருப்பது உறுதியாகியுள்ளது.

 

அதன்படி இன்று பொருளாளர் பதவிக்கான விண்ணப்ப படிவத்தையும் டி.ஆர்.பாலு சார்பில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ரூ.1000 பணம் செலுத்தி வாங்கியுள்ளார். எனவே பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் 9-ந் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதி என திமுக வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon