2 வயது குழந்தைக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த பாட்டி, சித்தி கைது..!
பெங்களூருவில் சிறுவனை தினமும் சித்ரவதை செய்து வந்த அவனது பாட்டி உட்பட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு நகரில் குரணப்பபாளையா என்ற இடத்தில் வசிக்கும் கூலித்தொழிலாளி இம்ரான் பாஷா மற்றும் ஆதிரா தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளன.
இதில் நான்காவது ஆண் குழந்தைக்கு இரண்டு வயதாகிறது. இயல்பாக அதிக உணவு உண்ணும் குழந்தையை அவரது பாட்டி முபினா தினமும் சித்ரவதை செய்து வந்துள்ளார். அதிகம் சாப்பிடாதே என கூறி சிறுவனுக்கு சூடு வைத்துள்ளார். இதனை சிறுவனின் சித்தி பாத்திமா படம்பிடித்து வாட்ஸ்அப் மூலம் உறவினருக்கு அனுப்பியுள்ளார்.
சித்திரவதை குறித்து தகவல் கிடைத்தவர்கள் சிறுவனின் வீட்டிற்கு சென்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதேவேளையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுவனின் பாட்டி மற்றும் சித்தியை கைது செய்தனர். சிறுவனை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.







