கடத்தி செல்லப்பட்ட சிறுவனை இரண்டரை மணி நேரத்திற்குள் மீட்ட காவல் துறையினர்..!
சென்னை தாம்பரம் அருகே முடிச்சூரில் காரில் கடத்தி செல்லப்பட்ட சிறுவனை இரண்டரை மணி நேரத்திற்குள்ளாக கண்டுபிடித்து காவல்துறையினர் மீட்டனர். மதனப்புறம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்ற போது அடையாளம் தெரியாத கும்பல் அவரை கடத்தி உள்ளது.
பின்னர் சிறுவனின் பெற்றோரை தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளது. பதறிப்போன பெற்றோர் இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதனடிப்படையில் களத்தில் இறங்கிய காவல்துறையினர் சுமார் இரண்டரை மணி நேரத்திற்குள் கடத்தி செல்லப்பட்ட சிறுவனை மறைமலைநகர் அருகே பத்திரமாக மீட்டுள்ளனர்.
விசாரணையில் தங்கராஜ் உணவகத்தில் பணி புரிந்து வந்த ஹரிஹரன் என்பவரே இந்த கடத்தலில் ஈடுபட்டதாகவும் தங்கராஜின் உறவினர் பெண்ணை காதலித்ததால் ஹரிஹரனை அவர் பணியிலிருந்து நீக்கியதும் தெரிய வந்தது. இதற்கு பழிவாங்கும் விதத்தில் அவரது மகனை ஹரிஹரன் கடத்தியது தெரியவந்தது.
கடத்தலில் ஹரிஹரனுக்கு உடந்தையாக இருந்த மேலும் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். துரிதமாக செயல்பட்டு கடத்தலை முடிவுக்கு கொண்டுவந்த பீர்க்கன்கரணை காவல்துறையினரை மாநகர காவல் ஆணையர் பாராட்டினார்.







