--- --:--:-- --

உள்ளாடையில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்.ரூ.1.15 கோடி மதிப்புள்ள 2 ஆயிரத்து 163 கிராம் தங்கத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் !!!

8.2

கோவை விமான நிலையத்தில் நுதன முறையில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.15 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரத்து 163 கிராம் தங்கத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கோவை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் கோவை வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

 

அப்போது,வழக்கமான சோதனைகள் முடிந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த 46 மற்றும் 33 வயது தம்பதியினரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களது உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.எதுவும் கிடைக்காததால் இருவரையும் தனியறையில் வைத்து சோதனை செய்தனர்.

 

அப்போது, உள்ளாடைகளில் 6 பாக்கெட்டுகள் இருந்ததும்,அதில் Paste form என்ற முறையில் தங்கத்தை பொடியாக்கி கெமிக்கல்கள் உடன் கலந்து எடுத்து வந்ததும் தெரியவந்தது. மேலும்,Paste form ல் கெமிக்கல்கள் இருந்ததால் விமான நிலையத்தில் இருந்த பரிசோதனை கருவிகளில் தங்கம் இருந்ததை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதும் தெரியவந்தது.

 

இதையடுத்து அத்தம்பதியினரிடம் இருந்து 1.15 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரத்து 163 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தம்பதியினரிடம் விசாரணை மேற்கொண்டதில் கடந்த மார்ச் மாதம் அரபு நாடுகளுக்கு சுற்றுலா சென்ற நிலையில் கொரோனா முடக்கத்தினால் கையில் இருந்த பணம் செலவழிந்த நிலையில் சொந்த ஊருக்கு திரும்பி முடியாமல் தவித்துள்ளனர்.

 

அப்போது,ஒரு கும்பல் தம்பதியினருக்கு உதவி செய்ததோடு தங்கம் கடத்தி வரச் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும்
கைது செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இக்கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கோவை விமான நிலையத்தில் முதல் முறையாக Paste form வடிவில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon