மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம்..! முதல்வர் அறிவிப்பு..!
கேரள மாநிலம் மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராஜ மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழகத்தை சேர்ந்த 80க்கும் அதிகமானோர் சிக்கினார். இதுவரை 62 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 12 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் தமிழர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாக தெரிவித்துள்ளார்.
இதில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாயும் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.







