“கேப்டன் இல்லாத கப்பலாக தத்தளிக்கும் காங்கிரஸ்!!” காந்தி குடும்பத்தை சாராத ஒருவரே தலைவராக வேண்டும்..! பிரியங்கா காந்தி விருப்பம்!!
அகில இந்திய காங்கிரஸ் தலைமைப் பொறுப்புக்கு காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவரை கட்சியினர் அடையாளம் காட்ட வேண்டும் என பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
135 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சி, தற்போது தலைமை இல்லாமல் தத்தளிக்கிறது. சுதந்திரத்துக்கு முன் காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு பெரும் போட்டி நிலவியது ஒரு காலம். அப்போதெல்லாம் பெரும் தலைவர்கள் பலர் தியாக மனப்பான்மையுடன் கட்சியில் இருந்தனர். அகில இந்திய அளவில் 3, 4 நாட்களுக்கு பெரிய மாநாடு நடத்தி தலைவரை தேர்வு செய்வர். தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டு தேர்தல் களை கட்டும்.
இது சுதந்திரத்திற்கு பின்னும் சிறிது காலம் தொடர்ந்தது. அதாவது நமது தமிழகத்தைச் சேர்ந்த கர்ம வீரர் காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக 1967 வரை இருந்த வரைக்கும் தொடர்ந்தது. இந்திரா காந்தி பிரதமரானவுடன் எல்லாமே தலைகீழானது. பெருந்தலைகளை எல்லாம் ஓரம் கட்டி விட்டு தானே காங்கிரஸ் தலைவரானானார்.
அதன் பின் காங்கிரஸ் என்றாலே இந்திரா காந்தி குடும்பம் என்றானது. இந்திரா காந்திக்குகுப் பின் அவரது மகன் ராஜீவ் காந்தி தலைவரானார். ராஜீவ் காந்திக்கு பின் அவரது மனைவி சோனியா காந்தி, தொடர்ந்து ராகுல் காந்தி என காங்கிரசில் காந்திகளின் ராஜ்ஜியம் 50 ஆண்டுகளாக தொடர்ந்தது. இடையில் நரசிம்மராவ், சீதாராம் கேசரி என ஓரிரு வருடங்கள் தலைவராக இருந்தனர்.
2018-ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டு, 2019 மக்களவை தேர்தலில் யிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். ஆனால் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்க, இந்த தலைவர் பதவியே வேண்டாம் என ஓட்டம் பிடித்தார்.
காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ராகுல் தான் தலைவராக நீடிக்க வேண்டும் என கெஞ்சா த குறையாக பிடிவாதம் பிடித்தாலும் ராகுல் காந்தி மசியவில்லை. அதோடு மட்டும் ராகுல் நிற்கவில்லை. இனிமேல் எங்கள் (காந்தி) குடும்பத்தில் இருந்து யாரும் காங்கிரஸ் பதவிக்கு விரும்பவில்லை. எனவே காந்தி குடும்பத்தை தவிர வேறு ஒருவரை அடையாளம் காட்டுங்கள் என்றும் ஒரே போடாக போட்டு நழுவி விட்டார்.

கேப்டன் இல்லாத கப்பலாக “காங்கிரஸ்”
ஆனால் தற்போதைய காங்கிரஸ் கட்சியிலோ நாடறிந்த நல்ல தலைவர்கள் யாரும் இல்லாததால் கேப்டன் இல்லாத கப்பலாக காங்கிரஸ் தடுமாறியது. வேறு வழியின்றி, வேறு தலைவரை தேர்வு செய்யும் வரை இடைக்கால தலைவராக பொறுப்பேற்பதாக கூறி சோனியா காந்தி மீண்டும் தலைமை பதவியில் அமர்ந்தார். சோனியா பொறுப்பேற்று ஒரு வருடம் கடந்த நிலையிலும் கூட ஒரு சிறந்த தலைவரை காங்கிரஸ் கட்சியினரால் அடையாளம் காண முடியவில்லை. இதனால் கடந்த வாரம் சோனியாவே இடைக்கால தலைவராக தொடர்வார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ள பிரியங்கா காந்தி, கட்சித் தலைமைப் பதவிக்கு காந்தி குடும்பத்தை சேராத ஒருவரே வரவேண்டும் என்பதை மீண்டும் தற்போது வலியுறுத்தியுள்ளார். காந்தி குடும்பம் சேராத ஒருவரை கட்சியினர் விரைந்து அடையாளம் காண வேண்டும். அந்த தலைவரின் கீழ் தற்போதைய பொதுச் செயலாளர் பதவியில் தொடரவும் தயாராக உள்ளதாக பிரியங்கா தெரிவித்துள்ளார்.
ஆனால் காங்கிரசிலோ தலைவர் பதவிக்கு பஞ்சமாக உள்ள நிலையில், மூழ்கும் நிலையில் உள்ள காங்கிரஸ் என்னும் கப்பலை கரை சேர்க்கப்போகும் கேப்டன் யாரோ? நூற்றாண்டை கடந்த காங்கிரசின் நிலைமை ஏன் இப்படி ஆனதோ? என்பது தான் கட்சியில் மிச்சம் மீதியுள்ள உள்ள தொண்டர்களின் கவலையாக உள்ளது.







