--- --:--:-- --

திருவாடானையில் மாற்றுத்திறனாளிகளை பல மணி நேரம் அல்லாட வைத்த அவலம்!!

754d8733-2c51-46c0-8ae2-ad9a21bc994c

ராமநாதபுரம் அருகே திருவாடானையில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாமில் மாற்றுத்திறனாளிகளை நீண்ட நேரம் காக்க வைத்து, குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல் பட்டினியில் பல மணி நேரம் காக்க வைத்த மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல வாரிய அலுவலர்களின் செயல் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் மற்றும் நிவாரணம், உபகரணங்கள் வழங்குவதாக கூறி பந்தல் போடப்பட்டு இருக்கைகளும் போட்டிருந்தனர்.

 

கொரோனோ நிவாரண நிதி

இதில் திருவாடானை தாலுகாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட நிலையில், அனைவருக்கும் மாற்றுதிறனாளிகளுக்கான தனித்த தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனோ நிவாரண நிதி ரூபாய் 1000 வழங்கப்படும் என்றும், புதிதாக உபகரணங்கள் மாற்று திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் வழங்குவார் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் ஆட்சியர் வீரராகவராவ் வேலை பளுவின் காரணமாக வர இயலவில்லை.

 

பல மணி நேரம் காத்திருப்பு

அதனால், இப்பகுதி மாற்று திறனாளிகள் மற்றும் புதிதாக மாற்று திறனாளிகளுக்கான புதிய அட்டை பெற வந்தவர்கள் காலை 10. மணி முதல் முகாமில் காத்திருந்தனர். இதில், நம்புதாளையில் இருந்து வந்திருந்த கண் தெரியாத மூதாட்டி தனக்கு புதிய அட்டைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அந்த ஏழை மூதாட்டிக்கு ஆய்வு செய்ய மருத்துவர்கள் யாரும் வரவில்லை. பின்னர் விசாரித்த போது முகாமிற்கு எலும்பு மருத்துவர், நரம்பியல் மருத்துவர், மனநல மருத்துவர் இப்படி ஊனமுற்றவர்களுக்கு ஆய்வு செய்ய எந்த மருத்துவரும் வரவில்லை.

கற்றில் பறந்தது கட்டுப்பாடு

ஒரு மருத்துவர் வந்திருந்தார். அவரோ நான் இதெற்கெல்லாம் சான்றிதழ் வழங்க முடியாது என்று கூறிவிட்டார். மேலும் முகாமில் தற்போதுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து கிஞ்சித்தும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். மாற்றுதிறனாளிகளிடமும் இது பற்றி எவ்வித விழிப்புணர்வும் இல்லை. முகக் கவசங்கள் அணியாமல், சமுக இடைவெளியில்லாமல் இருந்தனர்.

இதற்கு முத்தாய்ப்பாக மாவட்ட மாற்று திறனாளிகள் நல வாரிய அலுவலர் அதைப்பற்றி சிறிதும் கவலையின்றி அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி கூட்டமாக சமூக இடை வெளியில்லாமல் பலரும் நின்றனர்.மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா கால நிவாரண தொகையும் 2 மணிக்கு மேல் வழங்க ஆரம்பித்தனர்.

 

முகாமில் கலந்து கொண்ட மாற்று திறனாளிகளுக்கும் அவர்களுடன் துணையாக வந்தவர்களுக்கும் உணவு, குடிதண்ணீர் கூட முகாமில் வைக்க வில்லை.

 

? கேள்வி குறியாகத்தான்

இது குறித்து மாவட்ட மாற்று திறனாளிகள் நல வாரிய அலுவலரிடம் கேட்ட போது, அவரது பெயரைக் கூட கூற மறுத்துவிட்டார். அரசே மக்களைத் தேடிச் சென்று உதவிகள் வழங்கிட உத்தரவிட்டாலும் அதிகாரிகள் அதை முழுமையாக செய்வதில்லை. முகாம் ஏற்பாடுகள் பற்றி திருவாடானையில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் யாருக்கும் தெரிவிக்கப்படவும் இல்லை. இப்படிப்பட்ட அதிகாரிகளின் நடவடிக்கையால் உண்மையில் மாற்று திறனாளிகளுக்கு நிவாரணம் சென்றடைந்ததா? என்பதே கேள்வி குறியாகத்தான் உள்ளது.

Leave a Reply

Right Menu Icon