“குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை” உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இபிஎஸ்., ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின், வைகோ வரவேற்பு!!
குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை என உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புக்கு முதல்வர் இபிஎஸ்., துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தமிழக தலைவர்கள் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
குடும்பச் சொத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் சமஉரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்து வாரிசு உரிமைச் சட்டம் – 2005, நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, பெற்றோர் இறந்திருந்தாலும் அவர்களது சொத்தில் மகள்களுக்கு, மகன்களுக்கு நிகரான சம உரிமை இருப்பதாக பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்குவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று அளித்த தீர்ப்பில், பெற்றோரின் சொத்தைப் பிரித்து பங்கு வழங்கும் போது ஆண் பிள்ளைகளைப் போலவே பெண்களுக்கும் சம பங்கு வழங்க வேண்டும் என்று இந்து வாரிசு உரிமை சட்டம் – 2005, வழிவகை செய்கிறது,
மகள் எப்போதுமே அன்புக்குரிய மகள்தான், தங்களது வாழ்நாள் முழுவதும் என்று நீதிபதி அருண் மிஸ்ரா தமது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
“தலைவர்கள் அமோக வரவேற்பு”
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்புக்கு தமிழகத்தில் தலைவர்கள் பலரும் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பதிவில், சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பு குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், சமூக நீதியை காப்பாற்றும் விதமாக வந்திருக்கும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது
உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பின் மூலம் சமூகநீதி நிலைநாட்டப்பட்டதுடன், பெண்கள் முன்னேற்றத்திற்கு வலு சேர்ப்பதாக இந்த தீர்ப்பு அமையும் எனவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாகும். சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்ற சட்டத்தை 1989-லேயே கருணாநிதி கொண்டு வந்தார்.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை திமுகவின் கொள்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுகிறேன். அனைத்து தளங்களிலும் பெண்ணினம் சம உரிமை பெற்று தலை நிமிர தீர்ப்பு அடித்தளம் அமைக்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது அறிக்கையில், 1929 பிப்ரவரி 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாட்டில், ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமான சொத்து உரிமை, வாரிசு உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார்.
அதன்பின்னர், 1989 இல் கருணாநிதி முதல்வர் பொறுப்பில் இருந்தபோது, பெண்களுக்கு சொத்து உரிமை உண்டு என்ற சட்டத்தை நிறைவேற்றி, நாட்டுக்கே வழிகாட்டினார்.
இன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, பெரியாரின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும்.
கருணாநிதி, பெண்கள் சம உரிமை பெற 1989 ஆம் ஆண்டு நிறைவேற்றிய சட்டம், கலங்கரை விளக்கமாகத் திகழ்வதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது
என வைகோ தெரிவித்துள்ளார்.








