இடுக்கி நிலச்சரிவில் உயிரிழப்பு 42 ஆக உயர்வு… !அனைவருமே தமிழக தொழிலாளர்கள் மேலும் 26 பேரை தேடும் பணி தீவிரம்!!
கேரள மாநிலம் இடுக்கி அருகே நிலச்சரிவில் புதையுண்ட மேலும் 15 பேர் இன்று சடலமாக மீட்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு 42 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 12 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 26 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கியவர்கள் அனைவருமே தமிழர்கள் என்பது தான் பெரும் சோகம்.
கேரளாவில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு, பெருவெள்ளம் ஏற்பட்டு கேரளாவே இயற்கை சீற்றத்தால் கதிகலங்கி உள்ளது. இதில் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜ மலை பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டப் பகுதியில் நேற்று முன்தினம் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது இதில் அங்குள்ள ஒரு குடியிருப்பு பகுதி முழுவதுமே மண்ணில் புதையுண்டு, இருந்த இடம் காணாமல் போனது. அதிகாலை நேரத்தில் வீடுகளில் உறக்கத்தில் இருந்த அனைவரும் நிலச்சரிவில் மண்ணில் புதைந்தனர்.
மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்த நிலையில், தொடர் மழை காரணமாக தொய்வு ஏற்பட்டது. நேற்று வரை 27 பேர் சடலமாகவும், 12 பேர் உயிருடனும் மீட்கப்பட்ட நிலையில் இன்றும் 15 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதனால் உயிரிழப்பு 42 ஆக உயர்ந்த நிலையில், மேலும் 26 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. நிலச்சரிவு ஏற்பட்டு 3 நாட்கள் ஆன நிலையில், உயிரோடு இருப்பார்களா? என்பதே சந்தேகம் தான். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
இந்த நிலச்சரிவில் புதையுண்ட அனைவருமே தமிழர்கள் என்பது தான் கூடுதல் சோகம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த கயத்தாறு பகுதியைச் சேர்ந்த சில குடும்பத்தினர் 100 ஆண்டுகளுக்கு முன் இங்கு பிழைப்புக்காக குடியேறி பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கேரள மற்றும் தமிழக அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.






