10 மணிக்கு முக்கிய அறிவிப்பு ? 1 மணி நேரம் முன் டுவீட் செய்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்… என்னவாக இருக்கும் என பரபரப்பு… கடைசியில் இது தான் அறிவிப்பு!!
இந்தியா – சீனா எல்லையில் போர்ப் பதற்றம் நிலவும் நிலையில் இரு நாடுகளிடையேயான தொடர் பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு இது வரை எட்டப்படவில்லை.
இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு ராணுவ அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்ற தகவல் வெளியாக நாடு முழுவதும் பிரேக்கிங் செய்தியாக டி.வி. சானல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பின. ராஜ்நாத் சிங்கின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என யூகங்களை அள்ளிவிட்டன.
“10 மணி வரை நீடித்த சஸ்பென்ஸ்”
இதில் முக்கியமாக சீனப் பிரச்னை தொடர்பான அதிரடி அறிவிப்பு இருக்கும் என்பதாகவே எதிர் பார்க்கப்பட்டது. 10 மணி வரை இந்த சஸ்பென்ஸ் நீடிக்க பெரும் விவாதங்களும் களை கட்டின.சரியாக 10 மணிக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,, இந்திய அரசு பாதுகாப்புத்துறையில் சுயசார்பு அடைவதற்கான பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்து,
101 வகையான பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு செய்திருந்தார். மேலும் முப்படைகளுக்கும் ரூ.4 லட்சம் கோடி அளவிலான தளவாடங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் எனவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் துப்பாக்கிகள், சரக்கு போக்குவரத்துக்கான விமானங்கள், ரேடார்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தளவாடங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பை கண்டதும் பெரும் அதிரடி அறிவிப்பு இருக்கும் என எதிர் பார்த்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான். இதற்குத்தானா? ஒரு மணி நேரம் முன் டுவிட்டரில் முக்கிய அறிவிப்பு வெளியாகிறது என சஸ்பென்ஸ் வைக்க வேண்டும் என விமர்சனங்கள் எழத் தொடங்கின.
இப்படித்தான் இந்த கொரோனா காலத்தில் பிரதமர் மோடியும் நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்தப் போகிறார் என்ற அறிவிப்பு அடிக்கடி திடீரென முன்கூட்டி வெளியாகி பிரதமர் என்ன சொல்லப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்புடன், நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.








