காதலி ஜிமிக்கி கம்மலுக்கு ஆசைப்பட்டதால் நகையை திருடி விற்றதாக கூறும் நபர்..!
சென்னையில் நகைகளை திருடி அடகு கடைகளில் விற்று கள்ளக்காதலிக்கு ஜிமிக்கி கம்மல் வாங்கி கொடுத்த திருடனை சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள வீடுகளில் கொள்ளை, இருசக்கர வாகன திருட்டு போன்றவை நடைபெறுவதாக காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதேபோல நேற்று முன்தினம் பீட்டர் சாலையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் புகுந்த கொள்ளையன் 5 சவரன் தங்க நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளான். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அண்ணாசாலை போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
திருவல்லிக்கேணியை சேர்ந்த மேகநாதன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவனை கைது செய்து விசாரணை நடத்தியபோது குற்றத்தை ஒப்புக் கொண்ட அவன் நகைகளை விற்று டிநகரில் இருக்கும் பிரபல நகைக்கடையில் கள்ளக்காதலி ஆசைப்பட்டு கேட்ட ஜிமிக்கி கம்மல் வாங்கி கொடுத்தது தெரியவந்தது. திருட்டு நடந்த 48 மணி நேரத்திற்குள் திருடனை கைது செய்திருக்கும் போலீசார் விற்கப்பட்ட நகையை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.






