கொரொனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்யாமல் வீதியிலே விட்டுச்சென்ற சுகாதாரத்துறையினர்..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கொரோனா பாதிப்பால் இறந்த முதியவர் உடலை முறையாக அடக்கம் செய்யாமல் சுகாதாரத்துறையினர் வீதியில் வைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கொசப்பாளையம் அப்பாசாமி தெருவை சேர்ந்த 62 வயதான கூலித் தொழிலாளி டவுன் காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தார்.
அவருக்கு கொரொனா பாதிப்பு உறுதியான நிலையில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார். அவரது உடலை ஆரணி இடுகாட்டிற்கு எடுத்து வந்த நகராட்சி ஊழியர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் அரசின் வழிகாட்டுதல் முறைப்படி அடக்கம் செய்யாமல் சாலையில் வைத்து விட்டு சென்றனர்.
இந்நிலையில் உறவினர்களே முக கவசம் மற்றும் உடல் பாதுகாப்பு உடை அணிந்து இறந்தவர் உடலை அடக்கம் செய்துள்ளனர். இப்படி அலட்சியம் ஒருபுறம் இருந்தாலும் ஒரு புறம் மனித நேயமும் நிலவுகிறது. கோவை கரும்புக்கடை இலாகி நகரை சேர்ந்த மூதாட்டி ஒருவர் மரணமடைந்தார்.
அவரது உடலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் தமிழக சுகாதாரத்துறை வழிகாட்டுதலின் அடிப்படையில் அடக்கம் செய்தனர்.






