தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 4496 பேருக்கு தொற்று உறுதி… சென்னையில் மீண்டும் ஏறுமுகம்
தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த சில நாட்களாக சென்னையில் இறங்குமுகமாக இருந்த தொற்று எண்ணிக்கை இன்று மீண்டும் ஏறுமுகமாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தினமும் 4 ஆயிரத்திற்கு மேலாகவே பதிவாகி வருகிறது. தமிழகத்தில் நேற்று 4526 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், இன்று சற்று குறைந்து 4,496 ஆக பதிவாகி, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.5 லட்சத்தை கடந்து 1,51,820 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 2167 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்றும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை விட 2 -வது நாளாக அதிகரித்துள்ளது. நேற்று 4,743 பேர் குணமடைந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 5000 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்றைய பாதிப்பு 1078 ஆக இருந்த நிலையில், இன்று 1291 ஆக ஏறுமுகத்திற்கு சென்றுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் இன்றும் அதிகபட்சமாக 341 பேருக்கு பாதிப்பு உறுதியாகி, மொத்த எண்ணிக்கை 7331 ஆக உயர்ந்துள்ளது..திருவள்ளூரில் 278 , செங்கல்பட்டு 286, தூத்துக்குடி 269, நெல்லை 164, கோவையில் 104,,காஞ்சியில் 163, என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று தொற்று பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது.






