பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு சாத்தியமில்லை… டி.வி. மூலம் 3 நாட்களில் பாடம் நடத்தப்படும்… அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு சாத்தியம் இல்லை எனவும் 14 தொலைக்காட்சிகளில் 3 நாட்களில் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக முன்னெச்சரிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 2019 – 20-ம் ஆண்டுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெறவில்லை. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், கொரோனா தாக்கம் இன்னும் அதிகரித்தே வருவதால் 2020-21ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு எப்போது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது தொடர்பாக கோபியில் பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு சாத்தியமில்லை என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் இந்தப் பணி முடிவடையும். தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 நாட்களில் பாடம் நடத்தப்பட உள்ளது.
14 தொலைக்காட்சிகளில் பாடம் நடத்தப்படுகிறது. மாணவர்கள் Q.R .கோட் மூலம் எளிதில் கல்வி கற்கலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.






