ஊருக்கு தான் உபதேசமா? வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழாவில் சமூக இடைவெளியை மறந்த அமைச்சர் மற்றும் ஆட்சியர்!
கொரோனா விஸ்வரூபம் எடுக்கும் இந்த காலக்கட்டத்தில் சிவகங்கை அருகே வீரன் அழகுமுத்துக் கோன் குருபூஜையில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஊருக்கு உபதேசம் செய்யும் ஆட்சியாளர்களே இதனை மீறலாமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது முதலே பிரதமர் மோடி முதல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரை கூறி வரும் விஷயம் ஒன்றே ஒன்றுதான். கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் தொற்று பரவாமல் இருக்க, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம்.
அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுங்கள். முகக்கவசம் அணிவது அவசியம் என்றெல்லாம் கூறி, அதனை விளம்பரமாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் பொது வெளியில் மக்கள் அநாவசியமாக வெளியில் சுற்றுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந் தேதி முழுவதும் ஊரடங்கும் போடப்பட்டுள்ளது.
ஊருக்கு தான் உபதேசமா?

மேலும், கொரோனா பரவலை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு மிக, மிக அவசியம் என்றெல்லாம் கூறி வருகின்றனர். ஆனால் இப்படியெல்லாம் அறிவுரை கூறி வரும் ஆட்சியாளர்கள், இதற்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்பதை மறந்து விட்டார்களோ ? என்பது போல், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நடந்த அரசு விழாவில் அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் சமூக இடைவெளியை பின் பற்றாமல் அலட்சியம் காட்டியது ஊருக்கு தான் உபதேசமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தென்னிந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதல் சுதந்திர போராளியாக இருந்தவர் மாவீரன் அழகுமுத்துக் கோன். இவரது 263வது குருபூஜை விழா தமிழகத்தின் பல இடங்களில் இன்று நினைவு கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலில் இன்று நடைபெற்றது.
இதில் கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் பாஸ்கரன், வீரன் அழகுமுத்துக்கோன் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாஸ்க் அணியாமல் கலந்துகொண்டனர்.

“இந்த கொரோனா பரவல் காலத்தில், இந்நிகழ்ச்சியில் சமூக இடைவெளி இல்லாமல் இந்த நிகழ்வு நடைபெற்றது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இப்படி அரசு விதிகளை கடைபிடிக்காமல் பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சர் மற்றும் ஆட்சியர், சமூக இடைவெளிகளை கடைபிடிக்காமல் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.”
கொரானாவால் அமைச்சர் முதல் ஆண்டி வரை பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சமூக இடைவெளி இன்றி இதுபோன்று பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பற்று செயல்படுவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.







