--- --:--:-- --

கொரோனா தடுப்பு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? முதல்வர் எடப்பாடியுடன் மத்திய குழு தீவிர ஆலோசனை

8.3

தமிழகத்தில் கொரோனா தடுப்பு தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, மத்திய சுகாதார குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று விரிவான ஆலோசனை நடத்தினர்.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடங்கி 110 நாட்களை கடந்த நிலையில் இப்போது உச்சத்தில் உள்ளது.தமிழகத்தில் இதுவரை 1,28,561 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 1765 ஆக உயர்ந்துள்ளது. ஆரம்பத்தில் சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து உச்சம் தொட்டதால் இந்த மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. இதனால் தற்போது இந்த மாவட்டங்களில் தொற்று பாதிப்பு கடந்த 10 நாட்களாக குறைந்து வருகிறது.

 

ஆனால், தென் மாவட்டங்களிலோ தொற்று பாதிப்பு விறுவிறுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக மதுரையில் 100 நாட்களில் 1000 வரை மட்டுமே உயர்ந்திருந்த தொற்று எண்ணிக்கை அடுத்த 15 நாட்களில் கிடுகிடுவென உயர்ந்து 5 ஆயிரத்தை கடந்து, உயரிழப்பும் இன்று 100ஐ தாண்டியுள்ளது. இதனால் மதுரையில் முழு ஊரடங்கு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு 12-ந் தேதி அமலில் உள்ளது. இதேபோல் விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தேனி, குமரி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களிலும், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு உச்சமடைந்து வருகிறது.

 

தமிழகத்தில் கொரோணா பாதிப்பு நிலவரத்திற்கேற்ப, மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரக் குழுவினர் அரசுக்கு அல்வப்போது ஆலோசனை கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு உயரத் தொடங்கிய நிலையில், மத்திய சுகாதாரத் துறையின் சிறப்பு குழுவினர் தமிழகத்தில் ஆய்வு நடத்த வருகை தந்தனர்.

 

கடந்த புதனன்று சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறித்து இந்தக் குழுவினர் நேரில் ஆய்வுகளை மேற்கொண்டனர். நேற்று கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மதுரை, விருதுநகர், சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களின் ஆட்சியர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் இந்தக் குழுவினர் காணொலியில் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய சுகாதார குழுவினர் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.

 

சென்னை தலைமை செயலகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் நடத்தப்பட்ட ஆலோசனையில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மேற்கொண்டு மேற்கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்தும், கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்தும் மத்திய சுகாதார குழுவினர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon