3 நாட்களுக்கு பிறகு மீண்டும் 4 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு… இன்று 4231 தொற்று உறுதி… 65 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்களாக 4 ஆயிரத்திற்கு கீழ் கொரோனா பாதிப்பு பதிவான நிலையில் இன்று மீண்டும் எகிறி 4231 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் தொடர்ந்து பாதிப்பு குறைந்து இன்று 1216 பேருக்கு உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் ஆட்டம் நாளுக்கு நாள் மாறுபட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேயாட்டம் போட்ட கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது என்ற செய்தி ஆறுதல் அளித்தாலும் தற்போது தென்மாவட்டங்களில் பாதிப்பு உச்ச கட்டத்தில் உள்ளது கவலையளிக்கிறது. குறிப்பாக மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக 4 ஆயிரத்திற்கும் கீழாக இருந்த பாதிப்பு எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 4231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் இன்று 1216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் தொடர்ந்து 8-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளுரில் 364 பேர், விருதுநகர் 289,மதுரை 262 , கள்ளக்குறிச்சி 254, தூத்துக்குடி 196, செங்கல்பட்டு 169, நெல்லை 110, என தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் சின்னஞ் சிறு மாவட்டமான விருதுநகரில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் இன்று 289 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உச்சத்தை எட்டியுள்ளது.
கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 65 பேர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை 1765 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,26,581ஆக உயர்ந்த நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 78,164 ஆக உள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,994 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றும் சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.







