--- --:--:-- --

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாத்தான்குளம் பயணம்? ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் என பரபரப்பு தகவல்!!

7.3

போலீஸ் சித்ரவதையில் உயிரிழந்த ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூற முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாத்தான்குளம் செல்லவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

 

ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகியோரின் சிறைக் கொட்டடி மரணம், தூத்துக்குடி மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்களின் கடும் கோபத்துக்கும் கண்டனத்துக்கும் ஆளாகியுள்ளது. இந்த சித்ரவதை படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய காக்கி கயவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில் முதலில் மெத்தனம் காட்டப்பட்டதால் மக்கள் கொந்தளிப்பில் இருந்தனர்.

 


“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தூத்துக்குடி மாவட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூவும், சாத்தான்குளம் சம்பவம் குறித்து தெரிவித்த கருத்துகளும், விளக்கங்களும் மக்களை மேலும் கொந்தளிக்கச் செய்தன.”


இதனால் வேறு வழியின்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் எனக் கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்ற கிளை இந்த விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரிக்க ஆரம்பித்தது. நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோரின் அதிரடி உத்தரவுகளால் சாத்தான்குளம் சம்பவத்தில் விறுவிறுப்பான காட்சிகள் அரங்கேறத் தொடங்கின. உயர் நீதிமன்ற கிளை உத்தரவுப்படி வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் சென்றது.ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது.

 

அடுத்தடுத்த திருப்பமாக இந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஏற்கனவே சாத்தான்குளம் காவல் நிலைய பெண் காவலரான ரேவதி இந்த வழக்கில் போலீசுக்கு எதிராகவே சாட்சியம் அளித்த நிலையில், எஸ்.எஸ்.ஐ. பால் துரை, காவலர் முத்துராஜ் ஆகியோர் அப்ரூவராக மாறவும் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகி வழக்கு விசாரணை துரித கதியில் சென்று வருகிறது.

 

சிடிசிஐடி வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்ட 2 நாளில் கொலை வழக்கு, கைது நடவடிக்கை என பரபரப்பான கட்டத்திற்கு சென்றுள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர். இந்த சமயத்தில், தந்தை ,மகன் இருவரும் போலீசாரால் சிறைக் கொட்டடி மரணம் தொடர்பாக தமிழக அரசு மீதுள்ள மக்களின் கோபத்தை தணிக்கும் பொருட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாத்தான்குளத்திற்கு பயணம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


“சித்ரவதையால் உயிரிழந்த ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அப்போது அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கும் ஆணையையும் வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.”


உயிரிழந்த ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 20 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என ஏற்கனவே அறிவித்திருந்தது. இதில் ரூ.20 லட்சத்திற்கான காசோலை ஏற்கனவே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மூலம் வழங்கப்பட்டு விட்டது. இதேபோல் திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.25 லட்சத்தை கனிமொழி எம்.பி., நேரில் வழங்கியுள்ளார்.

 

அதிமுக சார்பிலும் ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த நிதியுதவியை ஏற்க ஜெயராஜ் குடும்பத்தினர் மறுத்து வந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த நிதியுதவியையும் வழங்குவார் எனத் தெரிகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சாத்தான்குளம் செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon