மதுரை வரும் அரசு, தனியார் பேருந்துகள் மேலூரில் நிறுத்தம்! பயணிகள் அவதி!
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மதுரை மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு முடக்கம் அமல் படுத்தப் பட்டிருக்கும் நிலையில் மதுரைக்கு வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பெருமளவில் நிறுத்தப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்தில் கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகராட்சி, பரவை, மதுரை கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் இன்று முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே திருப்பத்தூர், காரைக்குடி, கொட்டாம்பட்டி, சிவகங்கை உள்ளிட்ட இடங்களிலிருந்து வரும் பேருந்துகள் மேலூர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
அதேநேரம் மேலூரில் வழக்கம்போல அரசு பேருந்துகளும் தனியார் வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது மேலூரிலும் 5 பேர் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இந்த பகுதிகளிலும் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையில் முழு பொது முடக்கம் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் திருமங்கலம் வரை மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர். கொரொனா பரவல் காரணமாக மதுரையில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர் பகுதிகளில் இருந்து வரக்கூடிய பேருந்துகள் திருமங்கலம் வரை மட்டுமே இயக்கப்படுவதால் மதுரை செல்லக்கூடிய பயணிகள் அவதி அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தொழில் ரீதியாக வந்தவர்கள் மதுரைக்கு செல்ல முடியாமல் திருமங்கலத்தில் தவித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.






