ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கப்பட்ட செல்போனில் ஆபாச படம் பார்த்துவிட்டு 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன்!
பள்ளியில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கப்பட்ட செல்போனில் ஆபாச படங்களை பார்த்துவிட்டு 11 வயது சிறுமியை மாணவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமான சம்பவம் கோவையில் நடந்துள்ளது.
செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களை கண்டித்த காலம் மாறி, தற்போது அதே செல்போனை மாணவர்கள் பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியுள்ளது இந்த முழு முடக்க காலம். பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் மூலமாக மாணவர்கள் பாடங்களை கற்று வருகின்றனர்.
அவ்வாறு ஆன்லைன் வகுப்பிற்காக பயன்படுத்தப்படும் செல்போனில் ஆபாச படம் பார்த்துவிட்டு 11 வயது சிறுமியை பள்ளி மாணவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் கோவையில் நிகழ்ந்துள்ளது. சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி தனது தந்தை மற்றும் அத்தையுடன் வசித்து வந்துள்ளார்.
அவர்கள் இருவரும் வேலைக்குச் சென்றுவிட அந்த சிறுமி தொலைக்காட்சி பார்ப்பதற்காக பக்கத்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்த நிலையில் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அப்போது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியை பத்தாம் வகுப்பு மாணவன் மற்றும் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உட்பட மூன்று பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனையடுத்து அந்த மாணவரை பிடித்து காவலர்கள் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. அதில் ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கிய செல்போன் மூலமாக ஆபாச படம் பார்த்ததால் பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து மூன்று பள்ளி மாணவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவலர்கள் 2 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு மாணவரை காவலர்கள் தேடி வருகின்றனர்.






