விடுதியை தர இயலாது..! ஆடிட்டோரியம், 2 புதிய கட்டடங்களை தர தயார் என கூறிய சூரப்பா..!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதிக்கு பதிலாக ஆடிட்டோரியம் மற்றும் புதிய இரண்டு கட்டடங்களை தர தயார் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மாநகராட்சி ஆணையருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.
கொரொனா நோய் தோன்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தங்க வைத்து சிகிச்சை அளிப்பதற்காக அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியை இன்று மாலைக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கெடு விதித்திருந்தது.
இந்த நிலையில், மாணவர்கள் விடுதியில் அவர்களின் உடைமைகள் மற்றும் உடைகள் இருப்பதால் அவற்றை அப்புறப் படுத்த முடியாது என்பதால் மாணவர் விடுதியை தர இயலாது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக அண்ணா பல்கலைகழகத்தின் ஆடிட்டோரியம் மற்றும் புதிதாக கட்டியுள்ள இரண்டு கட்டங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு துணைவேந்தர் சூரப்பா சென்னை மாநகராட்சி ஆணையருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக நேற்று மாலை சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இரண்டு புதிய கட்டிடங்களையும் ஆடிட்டோரியயத்தையும் அவருக்கு சூரப்பா காட்டியதாக தெரிகிறது.






