நாளை காலை 10.22 மணிக்கு தொடங்கப்போகும் சூரிய கிரகணம்!
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழவுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதை முழுமையாக காண முடியாது. சென்னையில் 34% சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்கோட்டில் வரும்போது ஏற்படும் வானியல் நிகழ்வு சூரிய கிரகணம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சூரிய கிரகணம் ஏற்பட்ட நிலையில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது.
காலை 10:22 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2.20 மணி வரை சூரிய கிரகணம் நீடிக்க உள்ளது. கிரகணத்தின்போது ரிங் ஆப் பையர் எனப்படும் நெருப்பு வளைய நிலை ஒரு நிமிடம் வரை நீடிக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. சென்னையில் இந்த சூரிய கிரகணம் 34% தெரியும்.
இந்த சூரிய கிரகணத்தை மற்ற பகுதிகளிலும் பகுதி சூரிய கிரகணமாகவே காண முடியும் என்று வானியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். இந்தியாவின் வட பகுதிகள் மட்டுமின்றி சூடான், எத்தியோப்பியா, ஏமன், சவுதி, ஓமன், பாகிஸ்தான் மற்றும் சீனாவில் சூரிய கிரகணத்தை காண முடியும்.
சூரிய கிரகணத்தை நேரடியாக கண்களால் பார்க்கக் கூடாது என்று வானியல் அறிஞர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதற்குரிய கண்ணாடிகளை கொண்டே கிரகணத்தை பார்க்கலாம் என்றும் கூறியுள்ளனர்.






