--- --:--:-- --

படையப்பா பேச்சு… கொரொனாவால் போச்சு! தேர்தலில் களமிறங்க ரஜினி தயக்கம்… அரசியல் பணிகளில் நீடிக்கும் சுணக்கம்!

images (1)

தமிழகத்தில் எழுச்சி உருவாகட்டும், அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்ன ரஜினி, கொரோனாவின் தாக்கத்தால், இனி 0அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இனி உறுதியாக இருப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர் அரசியலுக்கு வருவது சந்தேகம் தான் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

 

அதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று அரசியலுக்கு கண்ணாமூச்சி காட்டி வந்த நடிகர் ரஜினிகாந்த், 2021 சட்டசபை தேர்தலில் போட்டி உறுதி என்று சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார். எனினும் அரசியல் கட்சி தொடங்குவதற்கான எந்தவொரு அறிகுறியும் அவரிடம் தென்படவில்லை. வழக்கம் போல் அவரது பேச்சு, காற்றோடு போச்சு என்று ரசிகர்கள் புலம்பத் தொடங்கினார்.

 

அதேநேரம், நகரங்கள், கிராமங்கள் வரை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமித்து, கட்சிக்கான அமைப்பை அவர் வலுப்படுத்தி இருப்பதாக சில செய்திகள் கசிந்தன. மேலும், புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில், அதிமுக- திமுக போன்ற பெரிய கட்சிகளுக்கு சற்றும் சளைக்காமல் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பலரையும் ஆச்சரியப்பட வைத்தனர். தற்போதைய கொரொனா வைரஸ் ஊரடங்கு முடக்கத்தின் போதும், பல மாவட்டங்களில் ரஜினி ரசிகர்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சேவை புரிந்து வந்தனர்.

 

எல்லாமே, ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையில், ரசிகர்கள் உற்சாகமாக களத்தில் பணி புரிந்து வருகின்றனர். ஆனால், ரஜினி இனி அரசியலுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்ற பேச்சு, கொரொனா பீதிக்கு மத்தியில் அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறது.

கடந்த மார்ச் 12ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், மாற்று அரசியல் என்ற முழக்கத்தை முன்வைத்தார். அப்போது, முதல்வர் பதவியில் தான் ஒருபோதும் அமரப்போவதில்லை என்று அறிவித்து, ரசிகர்களுக்கு “ஷாக்” தந்தார். அந்த சந்திப்பிலும், அரசியல் கட்சியின் பெயரையும் அறிவிக்காததால், அவரது ரசிகர்கள் வழக்கம் போல் ஏமாற்றத்துக்குள்ளாகினர். அரசியல் வருகை குறித்து ரஜினி குறிப்பிடும் போது, ‘மக்களிடம் எழுச்சி வரட்டும். அப்போது அரசியலுக்கு வருகிறேன்’என்றார். அதாவது, மலையை தூக்கத் தயார்; ஆனால், மலையை தூக்கி தோளில் வையுங்கள் என்ற கதையாகிப் போனது, ரஜினியின் அறிவிப்பு.

 

மார்ச் 12ம் தேதி ரஜினியின் பேட்டி வெளியான சில நாட்களில் கொரொனா அச்சுறுத்தல் இந்தியாவை ஆட்கொள்ள தொடங்கியது. மார்ச் இறுதி வாரத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்ததது. அன்று தொடங்கி இன்று வரை, ஒட்டுமொத்த இந்தியாவும், உலக நாடுகளும் இயல்பு வாழ்க்கைக்கு இன்னமும் திரும்பவில்லை.

 

இந்த கொரொனா பாதித்த அசாதாரண நாட்களில் கூட, தான் சார்ந்த திரைத்துறையை தவிர மற்றவர்களுக்கு ரஜினி ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ரஜினியை விட ஸ்டார் வேல்யூ குறைந்த நடிகர்கள் கூட அள்ளித் தந்தார்கள். அவ்வளவு ஏன், ரஜினியை குருவாக ஏற்றுக் கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், கொரொனா பாதிப்பால் பொருளாதாரம் முடங்கிய மக்களுக்கு தாராளமாக உதவிக்கரம் நீட்டினார்.

 

தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டு கூட இல்லாத நிலையில், கொரொனாவால் அரசியல் களம் பரபரப்பின்றி உள்ளது. ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களுக்கு பிறகே வழக்கமான அரசியல் நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம். அதன் பிறகு, சட்டசபை தேர்தலுக்கு ஆறு மாத அவகாசம் கூட இல்லாத நிலையில், கட்சியே ஆரம்பிக்காத ரஜினி என்ன செய்யப் போகிறார்? அவர் எப்போது கட்சி தொடங்கி, 234 தொகுதிகளையும் வலம் வந்து மக்களை சந்திப்பார்? அதிமுக- திமுக என்ற இரு பலம் பொருந்திய கட்சிகளை சமாளித்து அவரால் வெற்றிவாகை சூட முடியுமா? என்பதெல்லாம், அவரது ரசிகர்கள் பலரையும் குடையும் கேள்விகள்.

 

ஆனால், இந்த டென்ஷன் எல்லாம் ரசிகர்களுக்கு தான். ரஜினியோ, எந்த கவலையும் இல்லாமல் தனது வீட்டில் குடும்பத்தாருடன் ஓய்வை கழித்து வருகிறார். இந்த கொரொனா ஊரடங்கு காலத்தில், சேவை செய்து வரும் தனது ரசிகர்களை டிவிட்டர் மூலம் ஒருமுறை பாராட்டியதை தவிர, அவர் எதையும் செய்யவில்லை; அவரால் செய்யவும் முடியாது.

 

வயதாகிவிட்ட ரஜினிக்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் படங்களை நடித்தாலும் முன்பிருந்த கம்பீரம் மிஸ் ஆகிவிட்டது. இந்த சூழ்நிலையில் தான் அரசியல் பக்கம், அவரது பார்வை திரும்பியது; அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். ஆகஸ்டில் மாநாடு, செப்டம்பர் மாதத்தில் இருந்து தமிழகத்தில் சுற்றுப்பயணம் என்று ரஜினி திட்டங்களை வகுத்து வைத்திருந்தாராம். ஆனால், கொரோனாவால் எல்லா திட்டமும் பணால் ஆகிவிட்டது.

ஏற்கனவே முடித்துத்தர வேண்டிய படங்கள் இன்னமும் உள்ளன. அதுதவிர, அரசியல் சுற்றுப்பயணத்திற்கு முன்பாக அமெரிக்கா சென்று ஒருமுறை மருத்துவப்பரிசோதனை செய்து கொள்ளவும் ரஜினி திட்டமிட்டிருந்தாராம். இனி, படங்களை நடித்துக் கொடுப்பதா, அமெரிக்கா செல்வதா அல்லது தேர்தலுக்கு ஆயத்தமாவதா என, மூன்றில் ரஜினி எதை தேர்வு செய்வார்? நிச்சயம் அரசியலுக்கு வரும் முடிவைத்தான் ரஜினி கைவிட வாய்ப்புள்ளதாக, அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவிக்கின்றனர்.

 

ரஜினியின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், தற்போதுள்ள கொரொனா அபாயம் கருதியும், சில மாதங்களுக்கு ரஜினியை பொதுவெளியில், பொது நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாமென்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளார்களாம். ரஜினி அரசியலுக்கு வரும் போது, நிதித்தேவைகளை பூர்த்தி செய்து தருவதாக வாக்குறுதி அளித்த சில தொழிலதிபர்களின் தொழிலை, கொரொனா புரட்டிப் போட்டதால், அவர்களிடம் இருந்து நிதி உதவி கிடைக்குமா என்பதும் இனி சந்தேகம்தான். ரஜினியின் நெருங்கிய நண்பர்களான அமிதாப்பச்சன், தெலுங்கின் சிரஞ்சீவி போன்றவர்கள் எல்லாம் கூட, துடிப்புடன் இருந்த காலத்தில் அரசியலில் நுழைத்து, சூடு பட்டக் கொண்டனர். அரசியலுக்கு வர வேண்டாமென்று, ரஜினிக்கும் அவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

 

ரஜினி, 70 வயதான நிலையில், சமூக இடைவெளியை கடைபிடித்து, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் போய் பேசி, கட்சியை வளர்ப்பது என்பது, கொரொனாவுக்கு பிந்தைய சூழலில் சாத்தியமில்லை என்பதை ரஜினியும் உணரத் தொடங்கிவிட்டாராம். எனவே, கொரொனா வைரஸ் சூழலை காரணம் காட்டி, அரசியலில் இறங்கும் முடிவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்பதும் ரஜினியின் யோசனையாக இருக்கிறதாம்.

 

எனவே, வரும் சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தோ அல்லது அவரது கட்சியோ களம் காண்பது என்பது சந்தேகமே என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. “எனக்கு கட்சியும் வேணாம், எந்த கொடியும் வேணாம்” என்ற ரஜினியின் ராஜாதிராஜா படத்தின் பாடல் வரிகள் தான் நிஜமாகும் போல் தெரிகிறது.

 

Leave a Reply

Right Menu Icon