விசாரணை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட காசி மற்றும் அவரது கூட்டாளி!
இளம் பெண்களை காதலிப்பது போல நடித்து ஏமாற்றி நகை, பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட காசி மற்றும் அவரது கூட்டாளியின் விசாரணைகள் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். காசியின் வீட்டிலிருந்து மெமரி கார்டுகள் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காசி 80க்கும் மேற்பட்ட பெண்களை காதலிப்பதாக கூறி பின்னர் அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை காட்டு மிரட்டல் விடுத்து பணம் நகை பறித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த கொடூரம் சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகார் மூலமாக வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் பல பெண்கள் புகார் தெரிவித்ததால் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. காசி மீது இதுவரை 6 வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெறும் நிலையில் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அப்போது காசியின் வீட்டில் சோதனை செய்தபோது மெமரி கார்டுகள், 3 செல்போன்கள், பெண் மருத்துவர் பரிசாக அளித்த விலை உயர்ந்த கைக்கடிகாரம் மற்றும் சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மெமரி கார்டுகள், செல்போன்களை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
காசி மற்றும் அவரது கூட்டாளியின் காவல் முடிந்ததையடுத்து நாகர்கோவில் நீதிமன்ற நீதிபதி இருவரையும் நேரில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






