காதலுக்கு எதிர்ப்பு! வேறொருவருடன் திருமண ஏற்பாடு செய்ததால் காதலனுடன் பேசிவிட்டு தற்கொலை செய்து கொண்ட காதலி!
ஊரடங்கு காலத்தில் திடீரென திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்ததால் மாணவி ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உசிலம்பட்டியில் நடந்துள்ளது. அவரை தற்கொலைக்கு தூண்டியது யார் ? ஊரடங்கு விடுமுறையில் வீட்டில் இருந்த மாணவிக்கு அவசர திருமண ஏற்பாடு செய்யப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது உண்மைதான்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள துரைசாமி புதூரை சேர்ந்தவர் 19 வயதான சினேகா. மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் சினேகா வீட்டிலிருந்து வந்தார். சினேகாவுக்கும், மீனம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் வரும் வியாழக்கிழமை திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை கிராமத்தின் அருகே உள்ள மலையடிவாரத்தில் உள்ள ஒரு மரத்தில் சினேகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த உறவினர்கள் பெற்றோருக்கும் உத்தப்பநாயக்கனூர்காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சென்ற போலீசார் சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தொடர்ந்து தற்கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்கொலை செய்து கொண்ட இடத்தின் அருகில் ஆய்வு செய்தபோது சினேகா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதை வைத்து விசாரித்தபோது கல்லூரிக்கு சென்று வரும்போது மதுரை புதூரில் உள்ள உறவினர் ஒருவரின் மகன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மலர்ந்துள்ளது. காதல் விவகாரம் சினேகா வீட்டிற்கு தெரிந்து விசாரித்துள்ளனர். ஏற்கனவே இரு குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாள் பகை உள்ளதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஆனால் சினேகா காதலில் உறுதியாக இருந்ததால் அவசர அவசரமாக வேறு ஒருவருடன் பெற்றோர் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர்.
ஆனால் நிச்சயத்தை ஏற்காத சினேகா காதலனுடன் சேர்த்து வைக்குமாறு பெற்றோரிடம் போராடி வந்துள்ளார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் சினேகாவின் பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் புதன்கிழமை இரவு சினேகா தனது காதலனுடன் செல்போனில் நீண்டநேரம் பேசியுள்ளார். அதன்பிறகு நள்ளிரவு 12 மணிக்கு மேல் வீட்டில் இருந்து புறப்பட்டு மலையடிவாரத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு உள்ள ஒரு மரத்தில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. சினேகாவின் தற்கொலை கடிதத்தை வைத்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் தற்கொலை வழக்கை தற்கொலைக்குத் தூண்டிய வழக்காக மாற்றி பெற்றோர் உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
உறவுக்கார பையனை உருகி உருகி காதலித்த நிலையில் பெற்றோர்களுக்கு இடையிலான தகராறால் அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவசர அவசரமாக வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தால் 19 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






