கோவையில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை சில மணி நேரங்களில் மீட்பு !!!
கோவை அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம்.கணவன்-மனைவி கைது.குழந்தை இல்லாத காரணத்தால் இக்குழந்தையை கடத்தியதாக கைது செய்யப்பட்ட தம்பதி வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.
கடலூரைச் சேர்ந்த செல்வராணி,செல்வம் என்ற தம்பதியினர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து பிரசவம் முடிந்து வீடு திரும்பிய நிலையில் நேற்றைய தினம் இரு ஆண் குழந்தைகளுக்கும் பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக திருப்பூரிலிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
அப்போது,அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த 25 மதிக்கத்தக்க பெண் ஒருவர் தான் பிறப்புச் சான்றிதழ் வாங்கித் தருவதாக கூறி செல்வராணியிடம் இருந்த ஒரு ஆண் குழந்தையை எடை போட வேண்டுமென்று வாங்கிச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அந்தப் பெண்மணி காணவில்லை. இதனையடுத்து சந்தேகமடைந்த தம்பதியர் மருத்துவமனை வளாகத்தில் இருந்த காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

சம்பவம் குறித்து அறிந்த ரேஸ்கோர்ஸ் காவல் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.மேலும்,தனிப்படை அமைத்து குழந்தையை கடத்திச் சென்ற பெண்மணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் குழந்தையை நூதன முறையில் கடத்தி சென்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் விக்னேஷ் – பிரபாவதி தம்பதியினர் தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,குழந்தை இல்லாத காரணத்தால் இக்குழந்தையை கடத்தியதாக கைது செய்யப்பட்ட தம்பதி வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.






