கொரோனா மருந்தை பரிசீலனை செய்ய ஐசிஎம்ஆர்-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
கொரோனா பாதிப்பை குணப்படுத்தும் என கூறப்படும் கிருஷ்ணகிரி மருத்துவர் கண்டறிந்த மருந்தை பரிசீலிக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவுக்கு மருந்து கண்டறிந்ததாக கூறும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த மருத்துவர் வசந்தகுமார் அதற்கான ஆய்வு கட்டுரைகளை ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு அனுப்பி இருக்கிறார்.
இதுகுறித்து ஐசிஎம்ஆர் பதில் கூறாததால் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் தான் கண்டறிந்த மருந்தை ஐசிஎம்ஆர் பரிசோதனை செய்ய உத்தரவிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது புதிதாக கண்டறியப்பட்ட பீட்டா ஆட்கடட் மருந்து கொரொனாவை குணப்படுத்தும் எனவும் அதன் மதிப்பு வெறும் 2 ரூபாய் மட்டுமே எனவும் மருத்துவர் தரப்பில் வாதிடப்பட்டது.
மத்திய அரசு தரப்பிலும், ஐசிஎம்ஆர் தரப்பிலும் மனுதாரரின் கோரிக்கை விதிகளுக்கு உட்பட்டு பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மருந்தின் திறனை விரைந்து ஆய்வு செய்யுமாறும் ஐசிஎம்ஆர் மற்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






