வீர மரணமடைந்த ராணுவ வீரர்! முதல்வர் ரூ.20 லட்சம் நிதியுதவி!
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் சேலம் மாவட்டம் எடப்பாடி சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் வீரமரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதில் சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு உட்பட்ட வெத்தல காடு பகுதி அடுத்த சித்தூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் வீரமரணம் அடைந்தார். 1999 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த நிலையில்கடந்த 21 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து மதியழகனின் மனைவி தமிழரசியிடம் இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் ராணுவ வீரர்கள் சனிக்கிழமை சொந்த கிராமமான சித்தூருக்கு எடுத்து வரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் வீரமரணம் அடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மதியழகன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார். தன்னலம் கருதாமல் தியாக உணர்வோடு நாட்டின் பாதுகாப்பு பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வீரமரணம் அடைந்தவர் மதியழகன் எனவும் முதலமைச்சர் பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.






