3 மாதங்களுக்கு வாடகை வசூலிக்க கூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
வாடகைதாரர்களிடமிருந்து உரிமையாளர்கள் மூன்று மாத காலத்திற்கு வாடகை வசூலிக்க கூடாது என அரசாணை பிறப்பிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கொரொனா தொற்று பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தை கருத்தில் கொண்டு குடியிருப்புவாசிகளிடமிருந்து நிலம் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாத வாடகை கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மார்ச் 29ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த உத்தரவைப் பின்பற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை வெளியிட்ட சமயத்தில் 15 நாட்கள் வரைதான் ஊரடங்கு அமலில் இருந்தது. இப்போது ஊரடங்கு காலம் 60 நாட்களுக்கும் மேலாக நீட்டிக்கப்பட்டு உள்ளதால் மூன்று மாதத்திற்கு வாடகை வசூலிக்க கூடாது என்று வீடு, நில உரிமையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இது சம்பந்தமாக அரசுக்கு மனு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிராவில் மூன்று மாதங்களுக்கு வாடகை வசூலிக்க கூடாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் வாடகைதாரர்களிடம் வாடகை கேட்டாலோ அல்லது வாடகை கட்டணம் வசூலித்தால் காலி செய்தாலோ வீட்டில் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு எச்சரித்துள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்று மாத காலத்திற்கு வாடகை வசூலிக்க கூடாது என்று அனைத்து நிலத்தின், வீட்டின் உரிமையாளர்களுக்கு உத்தரவிடும் வகையில் அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.






