--- --:--:-- --

39 கைதிகளுக்கு கொரோனா தொற்று…! கைதிகள் அச்சம்!

11

கொரொனா அச்சுறுத்தல் காரணமாக சிறைகளில் நெருக்கடியை குறைக்க ஏழு ஆண்டுகள் மற்றும் அதற்கு கீழ் தண்டனை விதிக்கக் கூடிய வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ளவர்களை உயர்மட்ட குழு பரிந்துரையின் படி ஜாமீன் மற்றும் பரோல் மூலம் விடுவிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது. அதன்படி தமிழக சிறைகளில் ஆயிரக்கணக்கான கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

 

அதைப்போல சிறைகளில் உள்ள சுமார் 15,000 கைதிகளை பார்க்க உறவினர்களுக்கு தடை விதித்து வீடியோகால் மூலம் பார்க்கும் வசதிக்காக 51 ஆண்ட்ராய்டு செல்போன்கள் வழங்கப்பட்டது. அதைப்போல ஊரடங்கிற்கு பிறகு பதிவாகும் வழக்குகளில் புதிய கைதிகளை அடைக்க 37 மாவட்ட மற்றும் கிளைசிறைகள் தனிச் சிறைகளாக ஒதுக்கப்பட்டன.

 

சென்னையை பொறுத்தவரை புதிய கைதிகள் யாரும் புழல் சிறையில் அடைக்கப்படுவது இல்லை என்றும் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்படுவதாகவும் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இப்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் புழல் சிறையில் 30 கைதிகளுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

 

இதில் ஏழு கைதிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். கடலூர் மத்திய சிறையில் 4 கைதிகளுக்கும், மதுரை மற்றும் பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் தலா இரண்டு கைதிகளுக்கும், திருச்சி சிறையில் உள்ள ஒரு கைதிக்கும் கொரொனா நோய் தொற்று இருப்பதை சிறைத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.

 

தமிழக மத்திய சிறைகளில் மொத்தம் 200 கைதிகளுக்கு பரிசோதனை செய்து 39 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் சிறை மருத்துவமனையில் தயார் நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதற்கிடையே எழும்பூரில் உள்ள சிறைத்துறை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த 54 வயதான அலுவலர் ஒருவர் நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரொனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon