--- --:--:-- --

கொரொனா தொற்று உறுதி செய்யப்படும் 48 மணி நேரத்தில் உயிரிழக்கும் பலர்!

11

தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 145 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பலர் தொற்று கண்டறியப்பட்ட 48 மணி நேரத்திலேயே உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் சுமார் 100 பேர் 50 வயதைக் கடந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

 

20 முதல் 29 வயது உடைய ஒருவரும், 30 முதல் 39 வயது வரை உள்ள ஏழு பேரும், 40 முதல் 49 வயதுவரை உள்ள 20 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். 50 லிருந்து 59 வயதினர் 39 பேரும், 60 முதல் 69 வயதினர் 31 பேரும், 70 இலிருந்து 79 வயதினர் 27 பேரும் இதுவரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்நிலையில் உயிரிழந்தவர்களில் 50 சதவீதம் பேர் கொரொனா கண்டறியப்பட்ட இரண்டு நாட்களிலேயே உயிரிழந்ததாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் 24 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களில் 21 பேரும், மூன்று நாட்களில் 16 பேரும் உயிரிழந்துள்ளனர்.

 

நான்கு நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆகவும், ஐந்து நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆகவும், ஆறு நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆகவும் உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பத்து நாட்களுக்கு மேல் கடந்தவர்களில் உயிரிழப்பு விகிதம் குறைவாகவே உள்ளது.

 

முறையான பரிசோதனை செய்யப்படாததே உடனடி உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. பாசிடிவ் வந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமல்லாது அவர்களின் தொடர்புகளையும் கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தொற்று நோய் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

 

நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக பரிசோதனைகள் நடத்தப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்த போதிலும் இந்த பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon