இந்திய சீன எல்லை விவகாரத்தில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் தேவையில்லை!
எல்லைப் பிரச்சினையை அமைதியாக தீர்க்க சீனாவுடன் இணைந்து செயற்பட தயார் என இந்தியா தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மத்தியஸ்தம் தேவையில்லை என மறைமுகமாகவும் கூறியுள்ளது.
லடாக்கின் கிழக்கு பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்திய ராணுவம் சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் ராணுவ வீரர்களை குவித்துள்ளது.
இதற்கு பதிலடியாக இந்திய ராணுவமும் அந்த பகுதிகளில் வீரர்களை குவித்ததால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் காணப்படுகிறது. இதனையடுத்து இந்தியாவுடன் எல்லைப் பிரச்சனை இல்லை எனக் கூறிய சீன தூதர் இரு நாடுகள் இடையேயான கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வோம் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் எல்லைப் பிரச்சினையை அமைதியாக தீர்ப்பதற்கு சீன தரப்புடன் இணைந்து செயற்படத் தயார் என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் தெரிவித்துள்ளார். எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இருநாடுகளும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த அவர் இது தொடர்பாக பல ஒப்பந்தங்கள் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.
தலைமையின் வழிகாட்டுதல்படி வீரர்கள் எல்லையில் செயல்படுவதாகவும், இந்தியா எல்லையையும் இறையாண்மையையும் விட்டு கொடுக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினையை தீர்க்க மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில் அவரது உதவி தேவையில்லை என மறைமுக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.






