ஆளும் கட்சியினரின் துணையுடன் மணல் கொள்ளையில் ஈடுபடும் மாபியாக்கள்! எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்!! போலீஸார் குவிக்கப்பட்டதால் பதற்றம்!!!
சிவகங்கை மாவட்டம் தமறாக்கி அருகே கிளாதரி கிராமத்தில் ஆளும் கட்சியினர் மற்றும் அதிகாரிகளின் துணையுடன் சவுடு மணல் கொள்ளையில் ஈடுபடும் மணல் மாபியாக்களை கண்டித்து 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் குவிப்பு.
கிளாதரி ஊராட்சிக்குட்பட்ட கிளாதரி, கக்கினாம்பட்டி, மணப்பட்டி, கோனார்பட்டி, லெட்சுமிபுரம், சங்கம்பட்டி, வெளையப்பட்டி ஆகிய விவசாய கிராமங்கள் அமைந்துள்ளது.
இக்கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கக்குடிய, மருதங்குடி கண்மாய், பெரிய மிம்மி கண்மாய், சிறிய மிம்மி கண்மாய், குறிஞ்சிகுடி கண்மாய்கள் மூலம் சுமார் 2500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இக்கண்மாய்களுக்கு நீர்வரத்து பகுதியாக கிளாதரி கிராமத்தை ஒட்டியுள்ள சுமார் 300 ஏக்கர் பரப்பிலான மணல் பகுதி அமைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் மணல் அள்ளியதால் நீர் வரத்து குறைந்து, விவசாயம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் லாரிகளில் இரவு பகலாக மணல் அள்ளும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் 4 கண்மாய்களுக்கு வரும் நீர்வரத்து பாதிக்கப்பட்டு, விவசாயம் செய்ய இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
எனவே இதற்கு கிளாதரி ஊராட்சிகுட்பட்ட 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணல் அள்ளும் 3 பொக்கலைன் இயந்திரங்கள், லாரிகளை சிறைபிடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், போலீஸார் குவிக்கபட்டனர்.

ஆளும் கட்சி மற்றும் அதிகாரிகளின் துணையுடன் மணல் கொள்ளையில் ஈடுபடும் , மணல் மாபியாக்கள் கிராம மக்களை மிரட்டுவதும், எச்சரிப்பதும் தொடருவதாகவும், விபரிதம் நடைபெறும் முன்னர் மணல் கொள்ளை நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். பதற்றமான சூழ்நிலையால் தற்காலிகமாக மணல் அள்ளும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.






