தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதே நேரத்தில் சில இடங்களில் கோடை மழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, திருப்பத்தூர், மதுரை, தேனி, ஆகிய மாவட்டங்களிலும் கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் ராமநாதபுரம், தென்காசி, திருவண்ணாமலை ஆகிய 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான வரை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் 40 கிலோமீட்டர் வரை காற்றுடன் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் , கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனிடையே தமிழகத்தில் நேற்று 10 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக வேலூர் மற்றும் கரூர் பரமத்தியில் தலா 107.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சென்னையை பொருத்தவரை நுங்கம்பாக்கத்தில் 96.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.






