மனைவி மீது பாம்பை ஏவி கொலை செய்துவிட்டு இயற்கை மரணம் என நாடகமாடிய கணவன்!
கேரளாவில் பாம்பு கடித்து இளம்பெண் இறந்ததாக கருதப்பட்ட சம்பவத்தில் திடுக்கிட கூடிய தகவல்கள் அம்பலமாகியுள்ளது. பாம்பை விலைக்கு வாங்கி வைத்து மனைவியை கொன்ற கணவனை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியை சேர்ந்த உத்ரா கடந்த ஆறாம் தேதி பாம்பு கடித்து உயிர் இழந்தார்.
இதையடுத்து அறைக்குள் நுழைந்த பாம்பு கடித்து உத்ரா இயற்கையாக இறந்ததாக கணவர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் இரண்டாம் தேதி இதே போல உத்ரா பாம்பு கடித்து பாதிக்கப்பட்டார். அப்போது மருத்துவமனையில் சேர்த்து உத்ராவின் உயிரை காப்பாற்றிய பெற்றோருக்கு இரண்டாவது முறை பாம்பு கடித்ததாக கூறியதும் உத்ராவின் கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
தனது மகளை மட்டும் குறிவைத்து பாம்பு கடித்தது பற்றி அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து சுராஜை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் சுராஜ் தான் மனைவி மீது பாம்பை ஏவி கொலை செய்தது தெரியவந்தது.

மனைவியின் சொத்துக்களையும், நகைகளையும் தனக்கு உரிமையாக்கிக் கொள்வது, இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த கொலையில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது. தன்மீது சந்தேகம் வராத வகையில் இருக்க சுராஜ் பாம்பை ஏவியதாக விசாரணையில் அவர் தெரிவித்தார்.
யூடியூப் வீடியோக்கள் மூலம் பாம்பை பராமரிப்பது, ஏவுவது பற்றி தெரிந்து கொண்டதாக கூறிய சிராஜ் சுரேஷ் என்பவரிடம் 15 ஆயிரம் ரூபாய்க்கு பாம்பை வாங்கி கடந்த மார்ச் மாதம் மனைவி மீது ஏவியுள்ளார். அந்த முயற்சியில் அவர் பிழைத்துவிட்டார்.
இதை அடுத்து பத்தாயிரம் ரூபாய்க்கு மீண்டும் பாம்பை வாங்கி படுக்கை அறையில் விட்டு கொன்றுள்ளார். இதை தொடர்ந்து சுராஜ்ஜும், அவருக்கு பாம்பை விற்பனை செய்த சுரேஷையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.






